
நேபாளத்தில் பஸ் விபத்து 3 வெளிநாட்டினர் உட்பட 19 பேர் மரணம்
காட்மன்டு , பிப் 24-
மேற்கு நேபாளத்தில் நேற்று விடியற்காலையில் பயணிகள் பேருந்து ஒன்று மலைப்பாதையில் இருந்து 200 மீட்டர் உயரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், மூன்று வெளிநாட்டினர் உட்பட 19 பேர் கொல்லப்பட்டனர். இறந்தவர்களில் ஒரு பிரிட்டிஷ், சீன மற்றும் இந்திய பிரஜை ஆகியோரும் அடங்குவர். 44 பயணிகளை ஏற்றிச் சென்றபோது அந்த பேருந்து விபத்துக்குள்ளானது.
சுற்றுலா நகராமான போகாராவிலிருந்து (Pokhara) தலைநகர் காட்மன்டுவுக்கு சென்று கொண்டிருந்த அந்த பஸ் தாடிங் (Dhading) மாவட்டத்தில் உள்ள பெஹிகாட் சாலையில் இருந்து விழுந்ததில் 25 பேர் காயம் அடைந்தனர்.
அவர்களில் நியூசிலாந்து மற்றும் சீனாவைச் சேர்ந்த இரண்டு பயணிகளும் அடங்குவர். இந்த விபத்தில் காயம் அடைந்த அனைத்து பயணிகளும் காத்மாண்டுவில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று நேப்பாள போலீசார் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தனர்.
இந்த விபத்து குறித்து விசாரணைக்கு நேபாள அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. நேபாளத்தில் மோசமாக இருக்கும் மலைப்பாங்கான சாலைகளில் அடிக்கடி சாலை விபத்துக்கள் நடைபெறுவது வழக்கமான ஒன்றாக கருதப்படுகிறது. அந்நாட்டில் ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கானோர் சாலை விபத்துகளில் உயிரிழக்கின்றனர்.



