
கோலாலம்பூர், மார்ச்-2-கோலாலம்பூர், புக்கிட் ஜாலிலில் உள்ள கம்போங் முஹிபா PPR அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 வயது சிறுவன் உயிரிழந்தான்.
நேற்று அதிகாலை ஏற்பட்ட அத்தீயில் அவ்வீடு 80 விழுக்காடு சேதமடைந்தது.
தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுப்படுத்தினாலும், சிறுவன் மயக்க நிலையில் கண்டுபிடிக்கப்பட்டு பின்னர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
உணவு வாங்குவதற்காக 9 மாதக் குழந்தை முதல் 10 வயது சிறுவன் வரையிலான 6 குழந்தைகளையும் வீட்டில் தனியே விட்டு விட்டு தாய் வெளியில் சென்ற போது இத்துயரம் நிகழ்ந்தது தொடக்கக் கட்ட விசாரணயில் தெரிய வந்துள்ளது.
அண்டை வீட்டார் ஓடிச் சென்று மற்ற குழந்தைகளைக் காப்பாற்றிய வேளை, சம்பந்தப்பட்ட சிறுவன் மட்டும் தீ வேகமாகப் பரவி விட்ட முதன்மை படுக்கையறையில் சிக்கிக் கொண்டான்.
இச்சம்பவத்துக்கு பெற்றோரின் கவனக்குறைவு காரணமா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
அதாவது தீ விபத்து நிகழ்ந்தபோது அவன் கண்காணிப்பின்றி இருந்தானா என்பதை அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
விபத்துக்கான காரணமும் விசாரிக்கப்படுகிறது.



