
தெஹ்ரான், மார்ச்-7-இஸ்ரேலிய இராணுவம் புதிய தாக்குதல் அலை ஒன்றை ஈரான் மீது மேற்கொண்டுள்ள நிலையில், தலைநகர் தெஹ்ரானில் முக்கிய வர்த்தக விமான நிலையங்களில் ஒன்றில் பல வெடிப்புகள் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் விமான நிலையத் தளத்தில் விமானங்கள் எரிந்துகொண்டிருந்ததாக கூறுகின்றனர்.
நேற்றிவு மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதல், இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையானதாக இருந்ததாகவும், சில மணி நேரங்களுக்கு ஒருமுறை தாக்குதல்கள் தொடர்ந்ததாகவும் தெஹ்ரானில் வசிக்கும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
பதிலடி கொடுக்கும் வகையில் ஈரானும் இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளைப் பாய்ச்சி வருவதாகவும், அவற்றைத் தடுத்து நிறுத்தும் முயற்சிகளை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
“ஈரான் எந்த நிபந்தனையுமின்றி முழுமையாக சரணடைய வேண்டும்; மற்றபடி பேச்சுவார்த்தைக்கே இடமில்லை” என அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் எச்சரித்த நிலையில், இப்புதியத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதே சமயம், ஆயதொலா அலி கமேனி கொல்லப்பட்டுள்ள நிலையில், அமெரிக்க நிர்வாகத்தால் ஏற்றுக்கொள்ளப்படும் புதிய தலைவரையே ஈரான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் ட்ரம்ப் கறாராகக் கூறியுள்ளார்.
இதனிடையே லெபனான் தலைநகர் பெய்ருட்டிலும் பெரிய வெடிப்புகள் காணப்பட்டுள்ளன.
இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடங்கியதிலிருந்து அங்கு இதுவரை 217 பேர் உயிரிழந்துள்ளதாக லெபனானிய சுகாதார அமைச்சு கூறியது.
மற்றொரு நிலவரத்தில், இந்த போர் சூழலில் ஓமான் நாட்டில் சிக்கித் தவிக்கும் பிரிட்டிஷ் குடிமக்களை அழைத்து வர, இரண்டாவது _charter_ விமானம் தற்போது புறப்பட்டுள்ளது.



