Latestமலேசியா

சவால்களுக்கு மத்தியில் ஆலயங்களின் நிலப் பிரச்னைக்குத் தீர்வுக் காண களமிறங்கும் தேசிய இந்து ஆலய செயற்குழு; ஒத்துழைப்புக் கோருகிறது

கோலாலாம்பூர், மார்ச்-17-நாட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்து ஆலயங்கள் குறிப்பாக அனுமதியின்றி கட்டப்பட்டதாக கூறப்படும் ஆலயங்கள் குறித்து அண்மையக் காலமாக பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.

எதிர்ப்புப் பேரணி நடத்துவதும், சட்டத்தை கையில் எடுத்துக் கொள்வதும் என சில தரப்பினர் சற்று எல்லை மீறுவதையும், சமூக ஊடகங்களில் வெறுப்புணர்வைத் தூண்டுவதையும் காண முடிகிறது.

இந்நிலையில், ஆலய நிலப் பிரச்னைக்கு ஒரு தீர்வு கண்டு ஒழுங்குமுறைப்படுத்தும் நோக்கில், இந்து அமைப்புகள் சேர்ந்து அண்மையில் அமைத்தது தான் NHTSC எனப்படும் தேசிய இந்து ஆலய செயற்குழுவாகும்.

அக்குழுவின் நோக்கங்கள் குறித்து வணக்கம் மலேசியாவிடம் விளக்குகினார், மலேசிய இந்து சங்கத்தின் தேசியத் தலைவர் தங்க கணேசன்…

ஆலயப் பிரச்னைகளுக்கான தீர்வை எளிதாக ஏதுவாக ஆலயங்கள் 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

இந்த 4 வர்ணப் பிரிவுகளில், ஆக அதிகமாக சிவப்பு மற்றும் ஆரஞ்சுப் பிரிவுகளில் தான் ஆலயங்கள் உள்ளன.
இது பெரிய சவால் என்பதை தங்க கணேசன் ஒப்புக் கொண்டார்.

இவர்கள் குழு அமைத்து விட்டால் மட்டும் போதாது, பிரச்னையுள்ள ஆலயங்களின் நிர்வாகங்கள் முன்வர வேண்டுமென்பது முக்கியமாகும்.

இல்லையென்றால் பயனற்று போகும் எனவும் அவர் நினைவுறுத்தினார்.

பிரச்னையுள்ள ஆலயங்கள், தீர்வுத் தேடி வரும் போது தயார் செய்ய வேண்டிய ஆவணங்களையும் தங்க கணேசன் பட்டியிலிட்டார்.

அனுமதியின்றி கட்டப்பட்ட ஆலயங்கள் மீதான அமுலாக்க நடவடிக்கைகள் குறைந்தது 6 மாதம் முதல் 1 வருடத்திற்கு ஒத்தி வைக்குமாறும் NHTSC அண்மையில் பிரதமரைக் கேட்டுக் கொண்டிருந்தது.

ஆலயப் பிரச்னைகளைத் தீர்த்து மாநில-மத்திய அரசுகளுக்கு உதவிடும் நோக்கத்தை அது கொண்டுள்ளதாகக் கூறிய தங்க கணேசன், இந்த கால அவகாசம் என்பது குறுகிய காலமென்றாலும், இயன்றவரை செய்ய வேண்டியதை செய்வோம் என்றார்.

அண்மையில் பிரதமரின் அரசியல் செயலாளரை இக்குழு சந்தித்த தகவலையும் அவர் பகிர்ந்துகொண்டார்.

ஆக, மொத்தத்தில், ஆலயங்களின் நிலப் பிரச்னை உள்ளிட்ட விஷயங்களுக்கு நீண்ட கால அடிப்படையில் தீர்வை ஏற்படுத்தும் முயற்சியில் இக்குழு களமிறங்கியுள்ளது.
தற்சமயத்தில் இந்த முயற்சி பயனளிக்க சம்பந்தப்பட்ட ஆலயங்கள் ஒத்துழைக்க முன்வர வேண்டும் என தங்க கணேசன் கேட்டுக் கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!