
கோலாலம்பூர், மார்ச்-27-நாட்டில் ஆண்களே அதிகளவு திவாலாவதாக தெரிய வந்துள்ளது.
கடந்த ஜனவரி வரைக்குமான ஐந்தாண்டுகளில் திவாலான மொத்தப் பேரில் 72 விழுக்காட்டினர் அல்லது 17,168 பேர் ஆண்கள் ஆவர்.
28 விழுக்காடு அதாவது 6,664 பேர் மட்டுமே பெண்கள் என, தேசிய திவால் துறையின் தலைமை இயக்குநர் டத்தோ Ishak Bakri கூறினார்.
குறிப்பாக இளைஞர்கள் இந்த திவால் பிரச்னையில் அதிகமாக சிக்கிக் கொண்டுள்ளனர்.
தனிப்பட்ட கடன்களே திவால் நிலைக்கு இட்டுச் செல்லும் முக்கியக் காரணமாக உள்ளன.
இந்த 5 ஆண்டுகளில் 10,885 பேர் தனிப்பட்ட கடன்களை கட்ட முடியாமல் திவாலாகியுள்ளனர்.
அவர்களில் 20 முதல் 34 வயதுக்குட்பட்ட 3,481 இளைஞர்களும் அடங்குவர்.
அதே சமயம், திவாலான மொத்தப் பேரில் 35 முதல் 44 வயதானவர்களே மிக அதிகமாகும்.
இந்த வயதினரில் கிட்டத்தட்ட 40 விழுக்காட்டினர் திவாலாகியுள்ளனர்.
இது, வேலை செய்பவர்களிடையே அதிகரித்து வரும் நிதி அழுத்தத்தை காட்டுகிறது.
நிதி நிர்வாகம் பற்றிய அறிவு குறைவு, கட்டுப்பாடற்ற கடன் பயன்பாடு மற்றும் வருமானத்தை மீறிய வாழ்க்கை முறை போன்றவை இந்த திவால் நிலைக்கு வழிவகுக்கின்றன.
மக்கள் குறிப்பாக இளைஞர்களுக்கு நிதி கல்வி பற்றிய விழிப்புணர்வு அதிகரிக்கப்பட வேண்டும்.
இல்லையெனில், மேலும் பலர் கடன் சுமையில் சிக்கி திவாலாகும் அபாயம் உள்ளதாக டத்தோ Ishak நினைவூட்டினார்.



