
மாரான், ஏப்ரல்-1-பஹாங், ஸ்ரீ மாரான் மரத்தாண்டவர் ஆலயத்தில் பங்குனி உத்திரம் திருவிழா வெகு விமரிசையாக இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
இது ஆலயத்தின் 95-ஆம் ஆண்டு பங்குனி உத்திர திருவிழாவாகும்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய இவ்விழாவில், இதுவரை சுமார் 4 இலட்சம் பக்தர்கள் கலந்து கொண்டதாக, ஆலயப் பொறுப்பாளர் மருதவேலு நாராயணசாமி வணக்கம் மலேசியாவிடம் தெரிவித்தார்.
நேற்று மார்ச் 31-ஆம் தேதி தேரோட்டம் நடைபெற்ற வேளை, கோலாலாம்பூர் மற்றும் ரவூப்பிலிருந்து 3,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பாதயாத்திரையாக வந்தனர்.
முக்கிய விருந்தினர்களாக, ம.இ.கா தேசியத் தலைவர் தான் ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன், தேசிய ஒருமைப்பாட்டுத் துறை துணையமைச்சர் ஆர். யுனேஸ்வரன், டத்தோ டி. மோகன், மஹிமா தலைவர் டத்தோ என். சிவகுமார், டத்தோ டாக்டர் தேவராஜ் வேலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.




இவ்வருடம் இதுவரை 3,500 பால்குடங்கள் எடுத்தும், 300-க்கும் மேற்பட்ட காவடிகள் ஏந்தியும் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றினர்.
இந்நிலையில், வரும் ஞாயிற்றுக்கிழமை வரை பக்தர்கள் தொடர்ந்து வழிபாடு செய்வர் என ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.



