
புத்ராஜெயா, ஏப்ரல்-2-எரிசக்தி நெருக்கடியைச் சமாளிக்கும் வகையில்,
ஏப்ரல் 15 முதல், அனைத்து அமைச்சுகள், அரசுத் துறைகள், சட்டபூர்வ அமைப்புகள் மற்றும் GLC எனப்படும் அரசு தொடர்புடைய நிறுவனங்கள் வீட்டிலிருந்தே வேலைசெய்யும் (WFH) முறைக்கு மாறுகின்றன.
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அதனை அறிவித்துள்ளார்.
எரிபொருள் சேமிப்பு மற்றும் நிலையான எரிசக்தி விநியோகம் உறுதிச் செய்வதற்காக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவர் சொன்னார்.
“இதன் மேல் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்” என நேற்றிரவு நாட்டு மக்களுக்கு ஆற்றிய சிறப்பு உரையில் அன்வார் தெரிவித்தார்.
மேற்காசிய நெருக்கடி மற்றும் உலகச் சந்தையில் எண்ணெய் விலை போன்றவற்றை எதிர்கொள்ள, அரசாங்கம் ஏற்கனவே பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை அறிவித்திருந்தது.
நோன்புப் பெருநாளுக்கு திறந்த உபசரிப்பு இல்லை, அவசியமற்ற பட்சத்தில் அரசாங்க அதிகாரிகளுக்கு வெளிநாட்டுப் பணங்கள் இல்லை உள்ளிட்டவை அவற்றிலடங்கும்.
அதன் தொடர்ச்சியாக, தற்போது வீட்டிலிருந்து வேலை செய்யும் நடைமுறை அமுலுக்கு வருகிறது.
கோவிட் காலத்திற்குப் பிறகு, அரசுப் பணியாளர்களுக்கு இது ஒரு முக்கிய மாற்றமாகும்.



