
வாஷிங்டன், ஏப்ரல்-2 – அடுத்த 2 முதல் 3 வாரங்களில் ஈரானை ‘மிகக் கடுமையாக’ தாக்க தயாராக உள்ளதாக அமெரிக்க அதிபர் டோனட்ல் ட்ரம்ப் புதிய எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
இத்தாக்குதல்கள் ஈரானை ‘கற்காலத்திற்கே’ கொண்டு போகுமென, அமெரிக்க மக்களுக்கு ஆற்றிய தேசிய உரையில் அவர் குறிப்பிட்டார்.
“போரின் நோக்கங்களை அடைவதை நெருங்கி வருகிறோம்; வெகு விரைவில், அனைத்தும் நினைத்தபடி முடிவுக்கு வரும்” என்றார் அவர்.
இவ்வேளையில், ஈரான் மீதான போரால் எண்ணெய், எரிவாயு விலைகள் எகிறியிருப்பது, அமெரிக்கர்கள் மத்தியிலேயே சினத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது குறித்து தாம் நன்கறிவதாக குறிப்பிட்ட ட்ரம்ப், விலைகள் அனைத்தும் சீக்கிரமே இறங்கும் என பொதுவாக தெரிவித்தார்.
ஒருவேளை, போர் முடிவுக்கு வருவதை தான் அவர் கோடிகாட்டுகிறாரோ என, இதன் மூலம் எண்ணத் தோன்றுகிறது.
வாஷிங்டன் தாக்கவுள்ள முக்கிய இலக்குகள், ஈரானின் எரிசக்தி மற்றும் மின்சார அடித்தளங்கள் என்பதால், பொது மக்கள் வாழ்க்கையில் கடுமையான விளைவுகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
உலகத் தலைவர்கள், இந்தப் பதற்றம் பரவலான வட்டாரப் போருக்கு வழிவகுக்கும் அபாயம் இருப்பதாக எச்சரித்துள்ளனர்.
இந்த நிலைமை, உலக எண்ணெய் சந்தை மற்றும் அனைத்துலக நிலைத்தன்மை மீது தீவிர தாக்கத்தை ஏற்படுத்தும் என்றக் கவலைகளும் எழுந்துள்ளன..



