
இஸ்லாமாபாத், ஏப்ரல்-12-பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில், அமெரிக்கா – ஈரான் இடையில் நடைபெற்ற நேரடி அமைதிப் பேச்சுவார்த்தைகள் எந்த உடன்பாடும் எட்டப்படாமல் தோல்வியடைந்துள்ளன.
சுமார் 21 மணி நேரங்களாக விடிய விடிய பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடைபெற்றபோதிலும், அமெரிக்காவின் நிபந்தனைகளை ஏற்க ஈரான் மறுத்து விட்டதாக, அமெரிக்க துணையதிபர் JD Vance கூறினார்.
“எங்களால் இயன்றவரை மிகச் சிறந்த திட்டத்தை முன்வைத்தோம்; ஆனால் ஈரான் பிடிவாதம் காட்டுகிறது; இது ஈரானுக்கு கெட்ட செய்தி என்பது மட்டும் நிச்சயம்” என Vance கூறினார்.
இந்த பேச்சுவார்த்தைகள், அணுவாயுதத் திட்டம் தொடர்பான பதற்றங்களை குறைப்பதற்காக முன்னெடுக்கப்பட்டது.
ஆனால், இந்த முக்கிய பிரச்சனைகளில் இரு தரப்பும் ஒருமித்த முடிவுக்கு வர முடியாததால், கலந்துரையாடல்கள் முடிவின்றி நிறைவடைந்தன.
இன்னொரு முக்கியப் பிரச்சனையான Hormuz நீரிணையைத் திறப்பது பற்றிய பேச்சுவார்த்தையின் முன்னேற்றங்களை Vance வெளியிடவில்லை.
இந்நிலையில், பெரும் எதிர்பார்ப்போடு பாகிஸ்தான் வந்த அவர், ஏமாற்றத்துடன் வாஷிங்டன் திரும்பத் தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த அமைதிப் பேச்சுவார்த்தையின் தோல்வியால், மத்தியக் கிழக்கில் நீடித்த அமைதி ஏற்படுமென்ற நம்பிக்கை நனவாவது தள்ளிப் போயுள்ளது.



