Latestமலேசியா

வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குப் புதிய மேலாண்மை முறையா? வதந்திகளை மறுத்தார் ரமணன்

புத்ராஜெயா, ஏப்ரல்-16-வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான புதிய மேலாண்மை முறையை அரசாங்கம் அறிமுகப்படுத்தப் போவதாக வெளியான செய்திகளை, மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

பெரிய அளவிலான கட்டணங்களை வசூலிக்கும் இடைத்தரகர்கள் இன்றி, நிறுவனங்கள் நேரடியாக வெளிநாட்டுத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த வகைசெய்யும் மென்பொருள் ஒன்றுக்கு மலேசியா மாறவிருப்பதாக Bloomberg தகவல் வெளியிட்டுள்ளது.

அதோடு, ​ஒவ்வொரு தொழிலாளர் விண்ணப்பத்திற்கும் நிறுவனங்களுக்கு 1,000 அமெரிக்க டாலர் அதாவது RM4,700 கட்டணம் விதிக்கப்படும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

இரண்டுத் தகவலையும் ரமணன் மறுத்தார்.

அந்தச் செய்தி முற்றிலும் தவறானது என்றும், அத்தகைய எந்தவொரு புதிய முறையையும் அமல்படுத்தும் திட்டம் அமைச்சரவையில் ஆலோசிக்கப்படவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

இத்தகைய ஆதாரமற்ற தகவல்கள் பொது மக்களிடையே தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும் என அவர் வருத்தம் தெரிவித்தார்.

வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தொடர்பான எந்தவொரு கொள்கை மாற்றமும் சம்பந்தப்பட்ட அமைச்சுகள் மற்றும் பங்குதாரர்களுடன் ஆலோசிக்கப்பட்ட பின்னரே முறையாக அறிவிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

எனவே, அதிகாரப்பூர்வமற்ற ஆதாரங்களிலிருந்து வரும் தகவல்களை ஊடகங்கள் மற்றும் பொது மக்கள் நம்ப வேண்டாம் என அவர் கேட்டுக் கொண்டார்.

தொழிலாளர் விவகாரங்களில் வெளிப்படைத்தன்மையைப் பேணுவதில் அரசாங்கம் உறுதியாக இருப்பதாகவும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான தொழிலாளர் மேலாண்மை முறையைச் சீரமைக்கத் தொடர்ந்து பணியாற்றி வருவதாகவும் ரமணன் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!