கோயம்புத்துர் வால்பாறையில் கோர விபத்து: மலைப் பள்ளத்தில் வேன் கவிழ்ந்து 9 கேரளா சுற்றுப்பயணிகள் பலி

கோவை, ஏப்ரல்-18,
தமிழகத்தின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை மலைப்பாதையில் நிகழ்ந்த கோர விபத்தில், கேரளாவைச் சேர்ந்த 9 சுற்றுப் பயணிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 13 பேர், வால்பாறைக்கு சுற்றுலா வந்துவிட்டு மீண்டும் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது, வால்பாறை – பொள்ளாச்சி மலைப்பாதையில் உள்ள 13-வது வளைவில், எதிர்பாரா விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், தடுப்புச் சுவரை மோதி உடைத்துக்கொண்டு பள்ளத்தில் பாய்ந்தது.
இந்த விபத்தில் 7 பெண்கள் உட்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சைப் பலனின்றி மேலும் ஒருவர் உயிரிழந்தார்.
உயிரிழந்தவர்களில் பெரும்பாலோர் பள்ளி ஆசிரியர்கள் எனத் தெரியவந்துள்ளது.
மீட்கப்பட்ட ஓட்டுநர் உட்பட 4 பேர் தற்போது கவலைக்கிடமான நிலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இவ்விபத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
விபத்து குறித்து மேல் விசாரணைகளை கோவை மாவட்ட போலீஸ் மேற்கொண்டு வருகிறது.



