
கோலாலம்பூர்- தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் அம்னோ–பாஸ் ஒத்துழைப்பு மீண்டும் தேசிய அரசியல் குறித்து பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், மலேசியாவுக்கு தற்போது தேவைப்படுவது புதிய அரசியல் கூட்டணிகள் அல்ல, மாறாக நிலையான அரசியல் சூழலே என பிகேஆர் மத்திய தலைமைத்துவ மன்ற உறுப்பினரும், பத்து உபான் சட்டமன்ற உறுப்பினருமான ஏ. குமரேசன் தெரிவித்துள்ளார்.
கடந்த பத்து ஆண்டு காலத்தில் மலேசியா தொடர்ச்சியான அரசியல் மாற்றங்கள், கூட்டணி அரசுகளின் வீழ்ச்சி, பெரும்பான்மை மாற்றங்கள் மற்றும் பிரதமர் மாற்றங்களை சந்தித்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.
அதன் விளைவாக முதலீட்டாளர்களின் நம்பிக்கை பாதிக்கப்பட்டதோடு, நீண்டகால பொருளாதார திட்டங்கள், சீர்திருத்தங்கள் மற்றும் முதலீட்டு முடிவுகளும் தாமதமடைந்ததாக அவர் குறிப்பிட்டார்.
நிலைத்தன்மையற்ற அரசியல் என்பது வெறும் அரசியல் பிரச்சினை மட்டுமல்ல; அது நேரடியாக நாட்டின் பொருளாதாரத்தையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் முக்கிய காரணமாகும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசாங்கம் பொறுப்பேற்ற பின்னர், நாடு நிலையான அரசியல் சூழலை அடைந்திருப்பதால், பொருளாதார வளர்ச்சி, வெளிநாட்டு முதலீடுகள், செமிகண்டக்டர், மேம்பட்ட உற்பத்தித் துறை, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற முக்கிய துறைகளில் கவனம் செலுத்த முடிந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
வாழ்க்கைச் செலவு, வீட்டு வசதி, ஊதியம் மற்றும் பொது சேவைகள் தொடர்பாக மக்களுக்கு இன்னும் சவால்கள் இருப்பதை ஏற்றுக்கொண்ட குமரேசன், அவற்றை தீர்க்க தொடர்ச்சியான மற்றும் நிலையான ஆட்சி அவசியம் என்றார். அடிக்கடி ஏற்படும் அரசியல் மாற்றங்கள் எந்த சீர்திருத்தத்தையும் தாமதப்படுத்தும் என்றும் அவர் கூறினார்.
அம்னோ–பாஸ் ஒத்துழைப்பு நாட்டுக்கு சிறந்த மாற்றாக இருப்பதாக நம்பினால், பொருளாதார வளர்ச்சி, முதலீடுகளை ஈர்ப்பது, வேலைவாய்ப்பு, உற்பத்தித் திறன், தேசிய ஒற்றுமை மற்றும் அரசியல் நிலைத்தன்மையை எவ்வாறு உறுதி செய்வார்கள் என்பதை மக்களுக்கு தெளிவாக விளக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
“அரசியல் அதிகாரத்தைப் பெறுவதற்காக மட்டுமே கூட்டணிகள் அமைக்கப்படக் கூடாது. மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் பொறுப்பான ஆட்சி, வலுவான நிறுவனங்கள் மற்றும் பொருளாதார நம்பிக்கையை உருவாக்கும் கொள்கைகளே நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும். மலேசியா மீண்டும் அரசியல் நிச்சயமற்ற காலத்திற்கு திரும்பக் கூடாது,” என்று குமரேசன் வலியுறுத்தியுள்ளார்.



