
கோலாலாம்பூர், ஜூலை-17-மலேசிய இசை இரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்ற புகழ்பெற்ற பாடகர் சிட் ஸ்ரீ ராமின் ‘ஹார்ட் & சோல் 4.0’ (Heart & Soul 4.0 Live in KL 2026) இசை நிகழ்ச்சி, நாளை சனிக்கிழமை ஜூலை 18-ஆம் தேதி புக்கிட் ஜாலிலில் உள்ள Unifi Arena அரங்கில் மிக பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.

Woodmark Events ஏற்பாட்டில் நடைபெறும் இந்த மலேசியாவின் மிகப்பெரிய இந்திய இசை நிகழ்ச்சிக்கு, முதன்முறையாகத் தொடர்புத் துறை அமைச்சு மற்றும் MyCreative Ventures ஆகிய அமைப்புகள் தங்களின் அதிகாரப்பூர்வ ஆதரவை வழங்கியுள்ளன.
‘மலேசியா எப்போதும் தனது இரண்டாவது வீடு போன்றது’ எனக் குறிப்பிட்டுள்ள பாடகர் சிட் ஸ்ரீ ராம், இந்த மேடையில் தனது ரசிகர்களைத் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிப் பாடல்களால் மீண்டும் ஆட்கொள்ளவுள்ளார்.
கடந்த 2022 மற்றும் 2023-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற இவரின் முந்தைய இசைக்கச்சேரிகளின் அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
முற்றிலும் நேரடி இசையமைப்போடு, புதிய தொழில்நுட்பக் கலைவண்ணத்தில் உருவாகும் இந்த அனல் பறக்கும் இசை இரவு, மலேசிய இந்திய இசை ரசிகர்களுக்கு ஒரு மறக்க முடியாத அனுபவமாக அமையும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.



