Latestமலேசியா

1,000 ரிங்கிட் சிறப்பு உதவி: பள்ளிப் பேருந்து ஓட்டுநர்களின் விவரங்களைப் புதுப்பிக்க வலியுறுத்தும் APAD

கோலாலம்பூர், அக்- 16-தங்களது ஓட்டுநர்களின் விவரங்களை அக்டோபர் 30ஆம் தேதிக்குள் புதுப்பிக்குமாறு பள்ளிப் பேருந்து உரிமையாளர்களும் பள்ளிப் பேருந்துச் சேவை நடத்துனர்களும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். தரை, பொதுப் போக்குவரத்து ஆணையமான APADட்டின் இணையத்தளத்தில் அவர்கள் அவ்வாறு செய்யலாம். தகுதியுள்ள ஓட்டுநர்களுக்கு தலா 1,000 ரிங்கிட் சிறப்பு நிதியுதவி வழங்குவதை எளிதாக்க அது பேருதவியாக இருக்கும்.

அந்த நிதியுதவி அக்டோபர் 22ஆம் தேதி முதல் கட்டங்களாக வழங்கப்படும். தீபாவளிக்கு முன் அச்சிறப்பு நிதியுதவியை வழங்கும் வகையில், தகுதிச் சரிபார்ப்பு மற்றும் பணம் செலுத்தும் நடைமுறைகளைச் சீராக மேற்கொள்ள சம்பந்தப்பட்ட பள்ளிப் பேருந்து சங்கங்களுடன் இணைந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக APAD தெரிவித்தது.

ஓட்டுநர்களின் பெயர், முகவரி, தொலைபேசி எண், ஓட்டுநர் உரிமம், செல்லுபடியாகும் பொதுச் சேவை வாகன (PSV) உரிமம் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்கள் முழுமையாகச் சமர்ப்பிக்கப்பட வேண்டும். APAD, வணிக வாகன உரிம வாரியம் (LPKP) மற்றும் சாலைப் போக்குவரத்துத் துறை (JPJ) ஆகியவற்றின் தரவுகளுடன் அத்தகவல்கள் சரிபார்க்கப்படும்.

2027ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்தபோது, டாக்ஸி, வாடகை வாகனம் மற்றும் பள்ளிப் பேருந்து ஓட்டுநர்களுக்கு தலா 1,000 ரிங்கிட் ஒருமுறை நிதியுதவி வழங்கப்படும் எனப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்திருந்தார். ‘H’ வரிசை வாகனப் பதிவு எண்களின் ஏலத்தின் மூலம் கிடைத்த வருவாயிலிருந்து அந்த நிதியுதவி வழங்கப்படுகிறது. செப்டம்பர் 16 முதல் 20ஆம் தேதி வரை நடைபெற்ற ஏலத்தில் JPJ மொத்தம் 91.2 மில்லியன் ரிங்கிட் வருவாய் ஈட்டியுள்ளது.

தகுதியுள்ள ஓட்டுநர்களுக்கு நிதியுதவி உரிய நேரத்தில் கிடைப்பதை உறுதி செய்ய, அனைத்து பள்ளிப் பேருந்து உரிமையாளர்களும் பள்ளிப் பேருந்து சேவை நடத்துனர்களும் காலக்கெடுவுக்குள் ஓட்டுனர் விவரங்களை https://bantuanpemandu.mot.gov.my/bas-sekolah என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் புதுப்பிக்கலாம்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!