
சென்னை, ஜூலை-17-தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசாங்கத்தைக் கவிழ்க்க, ‘Project Meghalaya’ என்ற பெயரில் சதித் திட்டம் தீட்டப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு இந்திய அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
TVK கட்சியின் உத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் என். இளையராஜா அளித்த புகாரைத் தொடர்ந்து சென்னை போலீஸ் இந்த அதிரடி விசாரணையில் இறங்கியுள்ளது.
சட்டமன்ற வாக்கெடுப்பின் போது கட்சித் தலைமைக்கு எதிராக வாக்களிக்க, தமக்கு 35 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டதாகவும், அதற்கு மறுத்ததால் தமது குடும்பத்திற்கு மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் அவர் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
சுமார் 15 TVK சட்டமன்ற உறுப்பினர்களைப் கோடிக்கணக்கான ரூபாய் பணத்தாசைக் காட்டி இழுக்க, ‘IPDS’ கருத்துக்கணிப்பு அமைப்பின் YouTube பிரமுகர் திருநாவுக்கரசு உள்ளிட்டோர் திட்டமிட்டதே இந்த ‘Project Meghalaya’ சதித் திட்டம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
இந்த வழக்கில் இதுவரை 9 பேர் கைதுச் செய்யப்பட்டுள்ள நிலையில், முக்கியக் குற்றவாளியுடன் தொடர்பில் இருந்ததாகப் ‘புதிய தலைமுறை’ செய்தி ஊடகத்தின் மூத்த பத்திரிகையாளர் விஜயனிடம் போலீஸார் நள்ளிரவு வரை விசாரணை நடத்தி அவரது கைபேசியைப் பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும், இந்தச் சதித் திட்டம் தொடர்பாகத் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்கிற்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இதற்கிடையே, அரசியல் இலாபத்திற்காக TVK தங்கள் மீது பொய்க் குற்றச்சாட்டுகளைப் பரப்புவதாகக் கூறி தி.மு.க இப்புகாரை முழுமையாக மறுத்துள்ளது.



