
மலேசிய தேசிய நூலகத்தின் 2025/2026-ஆம் ஆண்டுக்கான புத்தக விருதுகள் வழங்கும் விழாவில் 21 உள்ளூர் படைப்புகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
‘தேசிய ஒற்றுமையின் ஊடகமாகப் புத்தகங்கள்’ என்ற கருப்பொருளுடன், உள்ளூர் எழுத்தாளர்கள் மற்றும் பதிப்பகங்களின் படைப்பாற்றலை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருதுகள் வழங்கப்பட்டன.
மின்னூல்கள் மற்றும் டிஜிட்டல் வாசிப்பு முறையை ஊக்குவிக்கும் வகையில் இந்த முறை புதிய பிரிவுகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
அந்த வகையில், மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சைட் சாடிக் சைட் அப்துல் ரஹ்மான் எழுதிய Jalan Tegak என்ற மலாய் நூல், அச்சு புத்தகங்களுக்கான வாசிப்பாளர்களின் தேர்வுப் பிரிவில் விருதை வென்றது.
அதே சமயம் 5 தமிழ் எழுத்தாளர்களும் வெவ்வேறு பிரிவுகளில் விருதுகளை வென்று தமிழ் இலக்கியத்திற்கு பெருமைச் சேர்த்துள்ளனர்.
இந்த விருதுகள், எழுத்தாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் மத்தியில் படைப்பாற்றலையும் உலகளாவிய போட்டித்தன்மையையும் ஊக்குவிக்கும் என்று தேசிய ஒருமைப்பாட்டுத் துறை அமைச்சர் டத்தோ ஏரன் அகோ டகாங் தெரிவித்தார்.
அதோடு மலேசிய இலக்கியத்தின் வளர்ச்சியை உலகத் தரத்திற்கு இணையாகக் கொண்டு செல்லும் எனவும் அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.



