
அசூன்சியோன், ஏப்ரல்-25 – தென்னமரிக்க நாடான பராகுவேயில் 19 .8 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான பணத்தைக் கொண்டு சென்ற Cessna 402 இரக விமானம் விபத்துக்குள்ளானது.
ஒரு பாதுகாப்பு நிறுவனத்திற்குச் சொந்தமான இந்த விமானம், தலைநகர் அசூன்சியோன் நோக்கிச் சென்றபோது விபத்தில் சிக்கி தீப்பற்றி எரிந்தது.
அவசரக்கால மீட்புப் படையினர் வருவதற்கு முன்பே 15 நிமிடங்களுக்குள், சுமார் 50 உள்ளூர் மக்கள் அங்குக் குவிந்து, சிதறிக்கிடந்த பணத்தைப் பொறுக்கிச் சென்றனர்.
இதையடுத்து அமெரிக்க டாலர் மற்றும் பிரேசில் நாணயத்தில் மொத்தமாக 8.2 மில்லியன் பணத்தைக் காணவில்லை.
விபத்தில் விமானி கொல்லப்பட்ட வேளை, உதவியாளர் ஒருவரும் மேலுமிரு பயணிகளும் காயமடைந்தனர்.
விபத்துக்கான காரணம் விசாரிக்கப்பட்டு வருவதோடு, காணாமல் போன பண நோட்டுகளை கண்டுபிடிக்கும் முயற்சியும் தீவிரமடைந்துள்ளது.



