
ஜோகூர் பாரு, ஜூலை-26-ஃபேஸ்புக்கில், இஸ்லாத்தை அவதூறாக பேசியதாகச் சந்தேகிக்கப்படும் ஆடவர் ஒருவரை ஜோகூர் போலீஸ் கைதுச் செய்துள்ளது.
இஸ்கண்டார் புத்ரியில் கைதான 37 வயது சந்தேக நபர் இஸ்லாத்தையும் நபிகள் நாயகத்தையும் இழிவுப்படுத்தும் வகையில் அநாகரீகமாகவும் ஆபாசமாகவும் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
சமூக வலைத்தளத்தில் பரவிய சர்ச்சைக்குரிய இந்த பதிவினால் இன நல்லிணக்கமும் அமைதியும் பாதிக்கப்படலாம் என்ற அச்சத்தில் பெறப்பட்ட புகாரைத் தொடர்ந்து இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அவரிடமிருந்து 2 கைப்பேசிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
அவ்வாடவர் செவ்வாய்க் கிழமை வரை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், குற்றவியல் சட்டம் மற்றும் மலேசியத் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டப் பிரிவுகளின் கீழ் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் போது பொது மக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், மத அல்லது இன உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் யாரும் பதிவிட வேண்டாம் என்றும் போலீஸ் மீண்டும் எச்சரித்துள்ளது.



