
ஷா ஆலம், செப்டம்பர் 10 — சிலாங்கூர், தெலுக் புனுட் (Teluk Bunut) பகுதியில் வாடகை வீட்டின் முன் விவசாயி ஒருவர் நேற்று முன்தினம் இரவு சுட்டுக்கொல்லப்பட்டார்.
சிலாங்கூர் மாநில காவல்துறைத் தலைவர் டத்தோ ஷசெலி கஹார் கூறுகையில், இரவு 10.30 மணி முதல் 11 மணிக்குள் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், பாதிக்கப்பட்டவர் உடலில் ஒன்றுக்கும் மேற்பட்ட துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகத் தெரிவித்தார்.
முதற்கட்ட விசாரணையில், அந்த வீடு உயிரிழந்தவரின் மகன் வாடகைக்கு எடுத்திருந்தது என்றும், அது தற்போது யாரும் வசிக்காத நிலையில் இருந்ததாகவும் தெரியவந்துள்ளது. வீட்டின் நிலைமையைப் பார்ப்பதற்காக அங்கு சென்றபோதே அவர் சுடப்பட்டிருக்கலாம் எனக் காவல்துறை நம்புகிறது.
சம்பவத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. நேரில் பார்த்த சாட்சிகள் இல்லாததுடன், பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
இதற்கிடையில், பந்திங் பகுதியில் 20 முதல் 30 வயதுக்குட்பட்ட உள்ளூர் ஆடவர் ஒருவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டு, விசாரணைக்காக இரண்டு நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் முக்கிய சந்தேகநபரா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இந்த வழக்கு குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.



