
கோலாலம்பூர், செப்.10-புத்ராஜெயாவில் சட்டவிரோதமாக வேகப் பரிசோதனையில் ஈடுபட்டதாக நம்பப்படும் நபர்களையும், அதில் பயன்படுத்தப்பட்ட வாகனங்களையும் காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். புத்ரா பாலத்தில் இரண்டு வாகனங்கள் அதிவேகப் பரிசோதனையில் ஈடுபட்டதைக் காட்டும் 25 வினாடி காணொளி ‘Threads’சில் பதிவேற்றப்பட்டதைத் தொடர்ந்து அச்சம்பவம் காவல் துறையின் கவனத்துக்கு வந்தது.
சம்பந்தப்பட்டவர்களின் அப்பொறுப்பற்றச் செயல் மற்ற சாலைப் பயனீட்டாளர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருந்ததை அக்காணொளியில் காண முடிந்தது. அதனை அடுத்து, விசாரணைக்கு உதவும் வகையில் சம்பந்தப்பட்ட நபர்கள் மற்றும் வாகனங்களை அடையாளம் காணும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக புத்ராஜெயா மாவட்டக் காவல் துறைத் தலைவர் உதவி ஆணையர் Aidi Sham Mohamed தெரிவித்தார்.
அச்சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், விசாரணையின் முடிவுகளின் அடிப்படையில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். அச்சம்பவம் 1987-ஆம் ஆண்டின் சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 81-இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இவ்வேளையில், பொதுச் சாலைகளில் தங்களுக்கும் மற்ற சாலைப் பயனீட்டாளர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் வேகப் பரிசோதனை அல்லது பந்தய நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என Aidi Sham பொதுமக்களுக்கு நினைவுறுத்தினார். சட்டவிரோத வேகப் பரிசோதனை மற்றும் பந்தய நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.



