
கோலாலம்பூர், செப்-10–பொது மன்னிப்பு வாரியம் நாளை ஒன்று கூடவுள்ளதாக கூட்டரசு பிரதேசத்திற்கான பிரதமர் துறை அமைச்சர் ஹான்னா இயோ உறுதிப்படுத்தியுள்ளார். எனினும், முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக் சமர்ப்பித்துள்ள வீட்டுக் காவல் கோரிக்கை குறித்து அக்கூட்டத்தில் விவாதிக்கப்படுமா என்பதைத் தெரிவிக்க அவர் மறுத்து விட்டார்.
நாளை காலை 8.30 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டவர்களில் தாமும் ஒருவர் என அவர் தெரிவித்தார். இருப்பினும், அக்கூட்டத்தின் நிகழ்ச்சி நிரல் மற்றும் அதில் விவாதிக்கப்படவுள்ள விவகாரங்கள் தொடர்பில் மேலதிக விவரங்களை அவர் வழங்கவில்லை.
“நாங்கள் அழைக்கப்பட்டுள்ளோம்; தற்போதைக்குத் இந்தத் தகவலை மட்டுமே அளிக்க முடியும்,” என்றாரவர். பொது மன்னிப்பு வாரியக் கூட்டம் நாளை நடைபெறுமா என எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த போது ஹான்னா இயோ அவ்வாறு கூறினார்.
இதனிடையே, தமது சிறைத்தண்டனையின் எஞ்சிய காலத்தை வீட்டுக் காவலில் கழிக்க அனுமதிக்க வேண்டும் என நஜிப் ரசாக் முன்வைத்துள்ள கோரிக்கை குறித்து நாளைய கூட்டத்தில் பரிசீலிக்கப்படுமா என்பது தெரியவில்லை. கூட்டத்திற்குப் பின்னரே அது தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.



