
கோலாலம்பூர், செப் 10 – மலேசிய இந்திய உருமாற்றப் பிரிவான மித்ரா, நாட்டின் இந்திய சமூகத்தின் மனித ஆற்றல், B40 மற்றும் M40 பொருளாதார மேம்பாடு மற்றும் சமூக-ஆன்மீக கட்டமைப்பை பலப்படுத்தும் நோக்கில் 59.76 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான 7 புதிய திட்டங்களை அமல்படுத்துகிறது. இதன் மூலம் 20,000-க்கும் அதிகமான தனிநபர்களும் 600 நிறுவனங்களும் பயனடைவர் என்று மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
இன்று நடைபெற்ற 2026-ஆம் ஆண்டிற்கான ‘உயர்வு மடானி’ இரண்டாம் கட்ட மானியம் வழங்கும் விழாவில் உரையாற்றிய அமைச்சர், அடிமட்ட அளவில் இந்திய சமூகத்தின் போட்டித்தன்மையை உயர்த்தி, டிஜிட்டல் இடைவெளியைக் குறைப்பதே மலேசிய மடானி அரசாங்கத்தின் முதன்மை இலக்கு என்று கூறினார்.
சிறு, நடுத்தர தொழில்முனைவோரின் வளர்ச்சிக்காக ‘உயர்வு மடானி 2.0’ திட்டத்திற்கு கூடுதல் நிதியாக 25 மில்லியன் ரிங்கிட் சேர்க்கப்பட்டு, மொத்த நிதி ஒதுக்கீடு 50 மில்லியன் ரிங்கிட்டாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் 1,400 வணிகர்கள் பயனடைவர். இத்திட்டத்திற்கான விண்ணப்பங்கள் செப்டம்பர் 14 முதல் அக்டோபர் 13 வரை திறக்கப்பட்டிருக்கும்.
உயர் கல்வியைப் பொறுத்தவரை, முதலாமாண்டு பயிலும் B40, M40 பிரிவு மாணவர்களில் 5,000 பேருக்கு உயர்தர டிஜிட்டல் சாதனங்களை வழங்க ‘பெராந்தி மதானி’ திட்டத்தின்கீழ் 13.25 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன், ‘மாணவர் சிறப்பு உதவித் திட்டம்’ மூலம் 5,000 B40 பல்கலைக்கழக மாணவர்களுக்குத் தலா 2,000 ரிங்கிட் வீதம் மொத்தம் 10 மில்லியன் ரிங்கிட் ஆரம்பக் கல்வி உதவிநிதியாக வழங்கப்படும். இவ்விரு திட்டங்களுக்கும் செப்டம்பர் 14 முதல் அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்.
பள்ளிக் கல்வித்துறையில், நவீன கற்றல் சூழலை உருவாக்கும் நோக்கில் நாடு முழுவதிலும் உள்ள 358 தமிழ்ப்பள்ளிகளுக்கு 400 ஸ்மார்ட் போர்டுகள் வழங்க 5.36 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், கல்வி அமைச்சின் கூட்டுறவோடு SPM, STPM தேர்வுகளில் தமிழ்மொழியை மேம்படுத்தும் திட்டத்திற்கு 900,680 ரிங்கிட் நிதியளிக்கப்படுகிறது. இதன் மூலம் 8,690 மாணவர்கள் பலனடையவர்.
சமூக இணக்கத்தை வலுப்படுத்த ‘ஹர்மோனி மதானி’ திட்டத்தின்கீழ் 5 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்கீழ் தேர்வு செய்யப்படும் அதிகபட்சமாக 250 குர்துவாராக்கள் (Gurdwara) மற்றும் இந்திய கிறிஸ்தவ தேவாலயங்களுக்குத் தலா 20,000 ரிங்கிட் மானியம் வழங்கப்படும். இதற்கான விண்ணப்பங்கள் செப்டம்பர் 14 முதல் அக்டோபர் 13 வரை திறந்திருக்கும்.
தவிர, மலாக்கா மாநில தமிழ்ப்பள்ளி மாணவர்களிடையே ஒழுக்கத்தை வளர்க்க மலேசிய குற்றத் தடுப்பு அறக்கட்டளையுடன் (MCPF) இணைந்து 250,000 ரிங்கிட் மதிப்பில் விழிப்புணர்வுத் திட்டமும் நடத்தப்படும்.
இத்திட்டங்களுக்கான விண்ணப்பங்கள் 30 நாட்களுக்குத் திறந்திருக்கும் நிலையில், விண்ணப்ப நடைமுறை மற்றும் தகுதி விவரங்கள் குறித்து மித்ராவின் தலைமை இயக்குநர் ரவீந்திரன் நாயர் விளக்கமளித்தார்.
இந்த மானியத் திட்டத்தின் மூலம் பயனடைந்தவர்களும் தங்களது மகிழ்ச்சியை வணக்கம் மலேசியாவுடன் பகிர்ந்து கொண்டனர்.
இந்த உதவிகள் அனைத்தும் தகுதியான நபர்களுக்கு வெளிப்படையாகவும் முறையாகவும் சென்று சேர்வதை உறுதி செய்ய, அரசு ஏஜென்சிகளுடன் இணைந்து கடுமையான பரிசீலனை முறைகள் பின்பற்றப்படும் என்றும் அமைச்சர் ரமணன் உறுதியளித்தார்.



