
அலோர் காஜா, செப்-10-மலாக்காவில் Kelemak தொழிற்பேட்டைப் பகுதியில் உள்ள உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையொன்றில் பெண் தொழிலாளி ஒருவரின் கை அரைக்கும் இயந்திரத்தில் சிக்கியதில், அவரது இடது கையின் அனைத்து விரல்களும் துண்டிக்கப்பட்டன.
அச்சம்பவம் குறித்து காலை 10.50 மணியளவில் தகவல் கிடைத்ததாக மலாக்கா தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் உதவி இயக்குநர் Mohd Shahrom Laji தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு விரைந்த 10 பேர் கொண்ட மீட்புக் குழுவினர், அப்பெண்ணின் கை இயந்திரத்தில் சிக்கியதை உறுதிப்படுத்தினர்.
அந்த 25 வயதான பெண் அலோர் காஜா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அவருக்கு மயக்க மருந்து அளிக்கப்பட்டது. பின்னர், இயந்திரத்தை எதிர் திசையில் சுழற்றி அவரது கையை மீட்புக் குழுவினர் பத்திரமாக விடுவித்தனர்.
எனினும் அப்பெண் இடது கையின் விரல்கள் அனைத்தையும் இழந்தார். அவருக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது.



