
கோலாலம்பூர், ஏப்ரல்-27-கோலாலம்பூர் புக்கிட் பிந்தாங்கில், வங்காளதேச நாட்டுக் கொடியைப் பிரதிபலிக்கும் வகையில் வண்ணம் பூசப்பட்ட ஒரு கல் நினைவுச் சின்னம் சமூக வலைத் தளங்களில் வைரலாகி மலேசியர்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
வைரலான அந்த வீடியோவில், பச்சை நிறக் கல்லில் சிவப்பு நிற வட்டமிடப்பட்ட அந்தச் சின்னத்தைச் சுற்றி வெளிநாட்டினர் நடமாடுவது தெரிகிறது.
அதிலும் குறிப்பாக, வெளிநாட்டவர் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் அந்தக் கல்லைத் துடைத்து, அதற்கு வணக்கம் செலுத்துவதும் பதிவாகியுள்ளது.
தலைநகரில் இத்தகைய செயல் நடந்திருப்பது இறையாண்மையை அவமதிப்பதாக மலேசிய இணையவாசிகள் கொந்தளித்து வருகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக கோலாலம்பூர் மாநகர மன்றமான DBKL மற்றும் குடிநுழைவுத் துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், இது குறித்து கூட்டரசுப் பிரதேச அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
தற்போது அந்தச் சின்னம் அந்த இடத்திலிருந்து அகற்றப்பட்டதாகத் தெரியவருகிறது.
இருப்பினும், இது குறித்து அதிகாரப்பூர்வமான விளக்கத்தை அதிகாரிகள் இன்னும் வெளியிடவில்லை…



