
சிரம்பான், ஏப்ரல்-27-நெகிரி செம்பிலான் மாநிலத்தில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
அங்கு பாரிசான் நேஷனலுடன் இணைந்து புதிய மாநில அரசாங்கத்தை அமைக்க தாங்கள் தயார் என பெரிகாத்தான் நேஷனல் (PN) அறிவித்துள்ளது.
இன்று காலை, மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமினுடின் ஹருண் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டதாகக் கூறி, 14 பாரிசான் சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களது ஆதரவை மீட்டுக் கொண்டனர்.
நெகிரி சமஸ்தானாதிபதி துங்கு முக்ரிஸ் துவாங்கு முனாவிரைப் பதவியிலிருந்து நீக்க முயற்சிக்கும் 4 தலைவர்கள் தொடர்பான நெருக்கடியே இந்த முடிவுக்குக் காரணம் என நெகிரி செம்பிலான் அம்னோ தலைவர் ஜலாலுடின் அலியாஸ் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மாநிலத்தின் நிலைத்தன்மையை உறுதிப்படுத்த 14 பாரிசான் சட்டமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து செயல்பட பெரிக்காத்தான் தயார் என்று நெகிரி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஹனிஃபா அபு பக்கார் கூறியுள்ளார்.
மாநிலத்திற்கும் மக்களுக்கும் முன்னுரிமை அளிப்பதே பெரிக்காத்தானின் முக்கிய நோக்கம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்த ஆதரவு வாபஸ் முடிவால் தற்போதைய மாநில அரசாங்கத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.
36 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட நெகிரி செம்பிலானில், ஆட்சியமைக்க 19 இடங்கள் தேவையாகும்.
தற்போது பாரிசானுக்கு 14 இடங்களும், பெரிக்காத்தானுக்கு 5 இடங்களும் இருப்பதால், இரு கூட்டணிகளும் இணைந்து புதிய அரசாங்கத்தை அமைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.



