
கோலாலம்பூர், மே 11 – வாங்சா மாஜுவின் (Wangsa Maju) ஜாலான் வாங்சா டெலிமா 4 (on Jalan Wangsa Delima) பகுதியில் திடீரென ‘சிங்க்ஹோல்’ (sinkhole) அதாவது நில அமிழ்வு உருவாகிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த இடத்தை சில நொடிகள் முன்பு கடந்து சென்ற கார் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.
சமூக வலைதளமான Threads-இல் பகிரப்பட்ட காணொளியில், சாலையோர வடிகால் அருகே திடீரென பெரிய குழி உருவாகும் காட்சி பதிவாகியுள்ளது.
நிலத்தடியில் உள்ள வடிகால் குழாயிலிருந்து நீர் வேகமாக வெளியேறியதால் மண் அரிப்பு ஏற்பட்டு, சாலை உடைந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
குழிக்குள் நீர் தேங்கியிருந்ததுடன், இரும்புக் கம்பிகள் மற்றும் செங்கற்களும் வெளிப்பட்டிருந்தன. சாலையின் ஓரப்பகுதியும் இடிந்து விழும் நிலையில் காணப்பட்டது.
இதற்கிடையில், மற்றொரு டாஷ்காம் காணொளியில், ஒரு கார் அந்தப் பகுதியைக் கடந்து சென்ற சில விநாடிகளுக்குப் பிறகே சாலை சரிந்து குழி உருவானது தெரியவந்தது.
வாகனம் திடீரென அதிர்ந்ததால் ஓட்டுநர் உடனடியாக காரை நிறுத்தியதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்துக்குப் பிறகு, அப்பகுதியில் அதிகமான உயர்மாடி குடியிருப்புகள் உள்ளதால் நிலத்தின் பாதுகாப்பு குறித்து சமூக வலைதளங்களில் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும், நீண்டகால மண் அரிப்பும் வடிகால் நீர் கசிவும் இந்த சம்பவத்திற்குக் காரணமாக இருக்கலாம் என சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.



