
ஷா ஆலாம், மே-11-தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள விஜய்க்கு, சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் வீ. பாப்பாராயுடு தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனை ஜனநாயகத்தின் மிக முக்கியமான தருணம்” என்று குறிப்பிட்டார்.
சுமார் 88 விழுக்காட்டுடன் தமிழகத்தில் இந்துக்கள் பெரும்பான்மையாக இருந்தபோதிலும், மக்கள் ஒரு கிறிஸ்துவத் தலைவரை முதலமைச்சராகத் தேர்ந்தெடுத்துள்ளனர்.
இது தலைமைத்துவம் என்பது மதம் அல்லது இனத்திற்கு உட்பட்டது அல்ல என்பதையும், சமூகத்திற்குச் சேவை செய்யும் திறனே முக்கியம் என்பதையும் உலகுக்கு உணர்த்தியுள்ளதாக பாப்பாராயுடு புகழாரம் சூட்டினார்.
வேற்றுமைகளைத் தாண்டி தமிழக மக்கள் காட்டியுள்ள இந்த ஒற்றுமை மற்றும் உள்ளடக்கிய மனப்பான்மை, இந்தியாவுக்கும் உலக நாடுகளுக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்றும் அவர் தெரிவித்தார்.
புதிய முதலமைச்சர் விஜய்யின் தலைமைத்துவம் தமிழகத்திற்குப் பெரும் முன்னேற்றத்தையும் அமைதியையும் தரட்டும் என்று அவர் வாழ்த்தியுள்ளார்.
கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகிய திரையுலக ஆளுமைகள் வரிசையில் தமிழகத்தின் புதிய அடையாளமாக விஜய் உருவெடுத்துள்ளார்.



