
ஜோர்ஜ்டவுன், மே-13-பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் சமூக மேம்பாட்டுத் திட்டங்களை விரிவுபடுத்த, மாநில அரசாங்கம் கூடுதல் நிதி ஒதுக்கீடு வழங்க வேண்டும் என பத்து ஊபான் சட்டமன்ற உறுப்பினர் குமரேசன் ஆறுமுகம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மாநில சட்டமன்றத்தில் உரையாற்றிய அவர், கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் இந்த வாரியம் 1.2 மில்லியன் ரிங்கிட் நிதியுதவியை வழங்கி, சுமார் 1,200 இந்து மாணவர்களுக்குப் பயனளித்துள்ளது என்பதைச் சுட்டிக்காட்டினார்.
தற்போது ஆண்டுக்கு 2 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டாலும், அதில் சுமார் 1.5 மில்லியன் ரிங்கிட் நிர்வாகச் செலவுகளுக்கே பயன்படுத்தப்படுவதாக அவர் சொன்னார்.
எனவே, கல்வி, நலன் மற்றும் சமூக மேம்பாட்டு முன்னெடுப்புகளை இன்னும் வீரியமாக முன்னெடுக்க கூடுதல் நிதி அவசியம் என அவர் வலியுறுத்தினார்.
மேலும், பினாங்கு மாநிலம் ஈர்த்துள்ள 63.96 பில்லியன் ரிங்கிட் முதலீட்டுச் சாதனை குறித்தும், ஜாலான் புக்கிட் காம்பீர் பகுதியில் இஸ்லாமிய மயானத்திற்கான நிலத் தேவை குறித்தும் அவர் தனது உரையில் பேசினார்.
இன, மத வேறுபாடின்றி அனைத்து மக்களுக்கும் துணை நிற்பதே தனது நோக்கம் என்று கூறிய அவர், தமிழகத்தின் புதிய முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் உள்ளடக்கிய தலைமைத்துவச் சிந்தனையுடன் தனது உரையை நிறைவுச் செய்தார்.



