TVET பயிற்சிக்காக சீனா புறப்பட்ட 35 இந்திய மாணவர்கள்; மித்ரா வாயிலாக 2.9 மில்லியன் வெள்ளி ஒதுக்கீடு

செப்பாங், மே-16,
மலேசியா – சீனா TVET பயிற்சித் திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக 35 இந்திய மாணவர்கள் AI மற்றும் மெக்கானிக்கல் துறைகளில் உயர்தரப் பயிற்சிகளைப் பெறுவதற்காக இன்று சீனாவுக்குப் புறப்பட்டுள்ளனர்.
செப்பாங், டியூன் ஹோட்டலில் நடைபெற்ற இந்த வழியனுப்பு நிகழ்வில் மித்ராவின் தலைமை இயக்குநர் ரவீந்திரன் நாயர் கலந்துகொண்டு மாணவர்களை வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்.
இது குறித்து ‘வணக்கம் மலேசியா’வுக்குப் பேட்டியளித்த ரவீந்திரன் நாயர், தொழில்நுட்பத் துறையில் உலக அளவில் அதிவேகமாக வளர்ந்து வரும் சீனாவுக்கு நமது இளைஞர்களை அனுப்பி அவர்களுக்குச் சிறந்த TVET தொழில்கல்வி பயிற்சிகளை வழங்குவதில் மித்ரா பெருமிதம் கொள்கிறது என்றார்.
இத்திட்டத்திற்காக மித்ரா 2.9 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளதுடன், ஆண்டுதோறும் 500 இந்திய இளைஞர்களைச் சீனாவுக்கு அனுப்ப இலக்கு கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அடுத்த 2 முதல் 3 வாரங்களுக்குச் சீனாவில் தங்கிப் பயிற்சி பெறவுள்ள மாணவர்கள், இந்த அரிய வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும் என்பதே மித்ராவின் முதன்மை நோக்கமாகும் என்றார் அவர்.
பயிற்சிக்காக சீன புறப்பட்ட மாணவர்களில் சிலர் இவ்வாய்ப்புக்காக மித்ராவுக்கு நன்றித் தெரிவித்ததோடு, திறன்களை வளர்த்துகொள்ள உறுதிபூண்டனர்.
இவ்வேளையில், இத்திட்டத்திற்குத் தொடர்ந்து முழு ஆதரவை வழங்கி வரும் மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணனுக்கு ரவீந்திரன் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.



