
கோலாலம்பூர், மே 20 -முடியாட்சி மற்றும் அதன் ஆணைகள் குறித்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்த கருத்துக்களுக்காக, டிஏபி-யின் டோனி புவாவை அம்னோ தலைமைச் செயலாளர் அஸ்ராப் வஜ்டி டுசுக்கி ( Asyraf wajdi Dusuki ) இன்று கடுமையாகச் சாடினார்.
கூட்டரசு அரசியலமைப்பு சட்டத்தில் டோனி புவா நன்கு தேர்ச்சி பெற்றவராகக் காட்டிக்கொண்டாலும், அரச அமைப்பை அவமதித்துள்ளதாக தனது முகநூல் பதிவில் அஷ்ராப் தெரிவித்தார்.
சுல்தானின் ஆணையை கேலி செய்வது பேச்சு சுதந்திரம் அல்ல. அது அநாகரிகமானது, என்று கூறிய அவர், டோனி புவா ஆணவத்துடன் இருப்பதாகக் குற்றம் சாட்டினார்.
மலாய் பாரம்பரியங்கள் , இஸ்லாம் மற்றும் மந்திரி பெசார் நியமனம், மாநில சட்டமன்றங்களைக் கலைப்பதற்கான ஒப்புதல் போன்ற அரசியலமைப்புப் பொறுப்புகள் என வரையறுக்கப்பட்ட அம்சங்களுக்குள் ஆட்சியாளரின் அதிகாரங்கள் கடுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன என்று டாமன்சாரா நாடாளுமன்ற தொகுதியின் முன்னாள் உறுப்பினருமான டோனி புவா எழுதியிருந்தார்.
நமது வாழ்வின் அனைத்து அம்சங்களையும் சட்டமாக்கும் கட்டாய ஆணைகளை ஆட்சியாளர் பிறப்பிக்கக்கூடிய ஒரு அமைப்பில் மலேசியர்கள் வாழவில்லை என்று புவா சுட்டிக்காட்டியிருந்தார்.
DAP சட்டமன்ற உறுப்பினர் வோங் சியூ கி மற்றும் முன்னாள் DAP தலைவர் ரோனி லியு ஆகியோர் ருக்கூன் நெகாராவை நன்கு புரிந்துகொண்டு, அந்த அரச அமைப்பை மதிக்க வேண்டும் என்று சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா விடுத்த அழைப்பைத் தொடர்ந்து அவரது கருத்துக்கள் வெளிவந்தன.
தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் ருக்கூன் நெகாராவின் கொள்கைகளை நிலைநிறுத்துவதற்கும், பொது வாழ்வில் கண்ணியத்தைப் பேணுவதற்கும் தங்களுக்குள்ள பொறுப்பை சுல்தான் நினைவூட்டினார்.



