Latestமலேசியா

நெகிரி செம்பிலான் தேர்தலில் தனித்து களமிறங்க PH தயார் – அந்தோனி லோக் அதிரடி அறிவிப்பு

சிரம்பான்,மே-25-நெகிரி செம்பிலான் சட்டமன்றத்திற்கு திடீர் தேர்தல் நடந்தால், பக்காத்தான் ஹராப்பான் (PH) கூட்டணி தனித்து களமிறங்கத் தயாராக உள்ளதாக அதன் துணைத் தலைவர் அந்தோனி லோக் தெரிவித்துள்ளார்.

2018 முதல் 2023 வரையிலான காலக்கட்டத்தில் பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும், கூட்டணி ஆதரவின்றி பக்காத்தான் ஹரப்பான் அம்மாநிலத்தில் வெற்றிகரமாக ஆட்சியை நடத்தியதை, போக்குவரத்து அமைச்சருமான அவர் சுட்டிக் காட்டினார்.

அண்மையக் காலமாக நிலவி வரும் அரசியல் நெருக்கடிகளைத் தீர்க்க மாநிலச் சட்டமன்றத்தைக் கலைப்பதே சிறந்த வழி என்றும், இது குறித்து மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமினுடின் ஹருணுடன் கலந்தாலோசிக்கப்படும் என்றும் அவர் சொன்னார்.

ஒருவேளை, ஜோகூர் அல்லது மலாக்கா மாநிலங்களுடன் ஏக காலத்தில் நெகிரி சட்டமன்றத்திற்கும் தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளதாக அந்தோணி லோக் குறிப்பிட்டார்.

முன்னதாக, அம்னோ மற்றும் பாரிசான் நேஷனல் அனைத்து இடங்களிலும் போட்டியிட்டால், பக்காத்தான் ஹராப்பானும் அனைத்து தொகுதிகளிலும் தனித்து களம் காணத் தயார் என PH தலைவரும் பிரதமருமான டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

நெகிரி செம்பிலான் சட்டமன்றத்திற்கு 2023-ல் தேர்தல் நடத்தப்பட்ட நிலையில், அதன் ஐந்தாண்டு தவணைக் காலம் 2028-ல் தான் முடிவடைய வேண்டும்.

ஆனால், அண்மைய காலமாகவே ஆளும் PH-BN கூட்டணிகளுக்கு இடையில் விரிசல் ஏற்பட்டுள்ளதால், தேர்தல் பேச்சு எழுந்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!