
ஜோகூர் பாரு, ஜூன்- 3-விரைவில் நடைபெறவுள்ள 16-ஆவது ஜோகூர் மாநிலத் தேர்தலில், ம.இ.கா வழக்கம் போலவே 4 தொகுதிகளில் போட்டியிடவுள்ளதாக நம்பகமான கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இருப்பினும், தேசிய முன்னணி (BN) கூட்டணிக் கட்சிகளுக்குள் தொகுதிப் பங்கீட்டை வலுப்படுத்தும் நோக்கில், அம்னோவுடன் ஒரு தொகுதி கைமாறிக் கொள்ளப்படக்கூடும்.
இதன்படி, ம.இ.கா வசம் இருந்த தெங்காரோ (Tenggaroh) தொகுதி அம்னோவுக்கு வழங்கப்படலாம் என கட்சி வட்டாரம் கூறியதாக மலேசியா கினி கூறியுள்ளது.
இந்திய வாக்காளர்கள் அதிகமாக உள்ள மற்றொரு சாதகமான தொகுதி மாற்றாக மஇகா-வுக்குப் வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது. அது எந்தத் தொகுதி என்பது இன்னும் தெரியவரவில்லை.
அதேவேளையில், கடந்த மாநிலத் தேர்தலைப் போலவே கெமளா (Kemelah), புக்கிட் பத்து (Bukit Batu) மற்றும் கஹாங் (Kahang) ஆகிய 3 தொகுதிகள் ம.இ.கா வசமே நீடிக்கும் எனத் தெரிகிறது.
தெங்காரோ, மாநில ம.இ.கா தலைவரும் ஆட்சிக் குழு உறுப்பினருமான ரவின் குமார் கிருஷ்ணசாமி வகிக்கும் தொகுதியாகும்.
மே 17-ஆம் தேதி, ம.இ.கா தேசியத் தலைவர் தான் ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் மற்றும் ஜோகூர் BN தலைவர் டத்தோ ஒன் ஹஃபிஸ் காசி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற ஜோகூர் தேசிய முன்னணி சந்திப்பில் இந்த முடிவு எட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.
கடந்தத் தேர்தலில், கெமளா, தெங்காரோ, கஹாங் ஆகிய 3 தொகுதிகளில் ம.இ.கா வேட்பாளர்கள் வென்றனர். மிக சொற்ப வாக்கு வித்தியாசத்தில் புக்கிட் பத்து தொகுதியில் தோல்வியுற்றது.
ஜூன் 1-ஆம் தேதி ஜோகூர் மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்டதை அடுத்து, அங்குத் தேர்தல் களம் தற்போது சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.



