
வாஷிங்டன், ஜூன்-5,
அமெரிக்காவின் சியாட்டில் (Seattle) நகரில், GPS புவியிடங்காட்டியின் வழிகாட்டுதலைக் குருட்டுத்தனமாக நம்பிச் சென்ற மூதாட்டி ஒருவர், தனது காரை இரயில் தண்டவாளத்தில் செலுத்திய விசித்திரமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
70 வயது மதிக்கத்தக்க அந்தப் பெண்மணி, மேம்பாலத்தில் இருந்த லைட் இரயில் (Light Rail) தண்டவாளத்தில் சுமார் 365 மீட்டர் தூரம் காரை ஓட்டிச் சென்று, அங்கேயே சிக்கிக்கொண்டார்.
மாலை நேரப் போக்குவரத்து நெரிசல் மிகுந்த வேளையில் இந்த அசம்பாவிதம் நடந்ததால், சியாட்டல் நகரின் முக்கிய இரயில் சேவை இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக முழுமையாக முடங்கியது.
காரை பத்திரமாக மீட்பதற்காக, தண்டவாளங்களுக்கான உயர் அழுத்த மின்சார சேவை உடனடியாகத் துண்டிக்கப்பட்டது.
இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் ஆங்காங்கே தவித்தனர்.
தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் காரில் இருந்த பெண்மணியை மீட்டு, பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர்.
அவர் மதுபோதையில் இல்லை என்பதும், இது முற்றிலும் ஒரு GPS குளறுபடியே என்பதும் உறுதிச் செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பயணிகளுக்காக அவசரக்கால சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.
பின்னர், கார் அகற்றப்பட்டு, தண்டவாளங்கள் முழுமையாகப் பரிசோதிக்கப்பட்ட பிறகு இரயில் சேவை மீண்டும் சீரானது.



