Latestஉலகம்மலேசியா

15,000 தாதியர் பற்றாக்குறை: இந்தோனேசிய தாதியர் நியமனம் மட்டும் தீர்வல்ல – லிங்கேஸ்வரன்

கோலாலம்பூர், ஜூன்-8-இந்தோனேசியாவிலிருந்து தாதியர்களைக் கொண்டுவரும் அரசாங்கத்தின் உத்தேசத் திட்டம் ஒரு தற்காலிக ‘பிளாஸ்டர்’ போன்ற தீர்வே தவிர, உள்ளூர் தாதியர்களின் முறையானப் பிரச்னைகளைப் புறக்கணிப்பதற்கான குறுக்கு வழியாக இருக்கக் கூடாது என எச்சரிக்கப்பட்டுள்ளது.

​மேலவை உறுப்பினர் செனட்டர் Dr லிங்கேஸ்வரன் ஆர். அருணாசலம் அதனை வலியுறுத்தியுள்ளார்.

கடுமையான பணிச்சுமை மற்றும் மிகக் குறைந்த தொடக்கச் சம்பளம் காரணமாகவே உள்ளூர் தாதியர்கள் சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு இடம்பெயர்கின்றனர் என்றார் அவர்.

தற்போதைய மருத்துவமனைகளில் தாதியர் மற்றும் நோயாளிக்கு இடையிலான விகிதம் 1-க்கு 10 என்ற அபாயகரமான அளவில் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

தற்போது சுகாதார அமைச்சு 15,000 தாதியர் பற்றாக்குறையை எதிர்கொள்கிறது.

இப்பிரச்னையைத் தீர்க்க, தாதியர்களின் தொழில் நிர்வாகத்தை பொதுச்சேவைத்துறையிடமிருந்து (JPA) பிரித்து, தனியாக ஒரு சுகாதார சேவை ஆணையத்தை உருவாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

வெளிநாட்டு தாதியர்கள் உள்ளூர் ஊழியர்களுக்கு ஒரு துணையாக இருக்க வேண்டுமே தவிர, அவர்களை முழுமையாக இடமாற்றம் செய்பவர்களாக இருக்கக் கூடாது என்று அவர் திட்டவட்டமாகக் கூறினார்.

இந்தோனேசியத் தொழிலாளர்களை தாதியர் வேலைக்கு எடுப்பது பற்றி மலேசியா தீவிரமாக யோசித்து வருவதாக, வெளியுறவு அமைச்சர் டத்தோ ஸ்ரீ மொஹமட் ஹசான் முன்னதாகக் கூறியிருந்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!