
கோலாலம்பூர், ஜூலை-23-Dataran Merdeka பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் தொடர்ந்து திறந்திருக்கும். ஆயினும் அதன் தூய்மை பேணப்பட வேண்டும் என கூட்டரசு பிரதேசத்திற்கான பிரதமர் துறை அமைச்சர் Hannah Yeoh பொதுமக்களுக்கு நினைவூட்டினார்.
கடந்த திங்கட்கிழமை அதிகாலை நடைபெற்ற உலகக் கிண்ண இறுதியாட்டத்திற்குப் பிறகு Dataran Merdeka குப்பைக் கூளங்கள் நிறைந்து காணப்பட்டது. அதன் புகைப்படங்களை வெளியிட்டு கோலாலம்பூர் மாநகர் மன்றம் கவலை தெரிவித்திருந்தது.
அது யாரையும் அவமானப்படுத்தும் நோக்கில் வெளியிடப்படவில்லை. மாறாக பொது இடங்களின் தூய்மையைக் கட்டிக் காப்பது மீதான விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தவே அவ்வாறு செய்யப்பட்டதாக அவர் தெளிவுபடுத்தினார்.
குப்பைகளை அகற்றுவது துப்புரவுப் பணியாளர்களின் கடமை மட்டுமே என சில தரப்பினர் கருதுகின்றனர். அத்தகைய மனப்பான்மை குழந்தைகளுக்கு ஒரு மோசமான முன்னுதாரணமாக அமையும்.
அரசு ஏற்பாடு செய்யும் ஒவ்வோர் இலவச நிகழ்ச்சியும், பொதுமக்கள் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக பொழுதைக் கழிக்க வேண்டும் என்ற நோக்கிலானது. ஆனால், அதே சமயம் பொது இடங்களின் தூய்மையைப் பேணும் கலாச்சாரம் கட்டாயம் வளர்க்கப்பட வேண்டும் என அமைச்சர் வலியுறுத்தினார்.
ஏற்பாட்டாளர்களுக்கு எதிரான சாத்தியமான நடவடிக்கை தொடர்பில் பேசிய அவர், DBKL அவ்விஷயத்தை மறுபரிசீலனை செய்யும் என்றார்.
இவ்வேளையில், வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சு, குப்பை கொட்டும் குற்றங்கள் தொடர்பான சட்டங்களைத் திருத்தியுள்ளது என்றும், அடையாளம் காணப்படும் நபர்கள் மீது அமலாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றும் Hannah Yeoh சுட்டிக் காட்டினார்.



