
துபாய், ஜூன்-17-பிரபல குறுஞ்செய்தி செயலியான டெலிகிராம் இந்தியாவில் தற்காலிகமாக தடைச் செய்யப்பட்டுள்ளது குறித்து அதன் தலைமை செயல் அதிகாரி பாவெல் துரோவ் (Pavel Durov) கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
ஜூன் 21-ஆம் தேதி நடைபெறவிருக்கும் NEET-UG 2026 மறுதேர்வின் போது, முறைகேடுகள் மற்றும் போலி வினாத்தாள் கசிவுகளைத் தடுப்பதற்காக, இந்தியத் தகவல் தொழில்நுட்ப அமைச்சு ஜூன் 22 வரை டெலிகிராம் செயலிக்கு இந்தத் தடையை விதித்துள்ளது.
இந்த நடவடிக்கை குறித்து X தளத்தில் பதிவிட்டுள்ள பாவெல் துரோவ், வினாத்தாள்களை கசியவிட்ட உண்மையான குற்றவாளிகளை விட்டுவிட்டு, இந்தியாவில் உள்ள 15 கோடிக்கும் அதிகமான சாதாரண டெலிகிராம் பயனர்களை இந்தத் தடை தண்டிப்பதாகக் கூறியுள்ளார்.
மேலும், இந்தத் தடையால் எந்தப் பயனும் இல்லை என்றும், மோசடிக்காரர்கள் தங்களின் செயல்பாடுகளை மற்ற செயலிகளுக்கு மாற்றிவிட்டனர் என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
போலிச் செய்திகளைப் பரப்ப டெலிகிராமில் உள்ள ‘Message Editing’ அம்சம் தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறி இந்திய அரசு இந்தத் தடையை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



