
கோலாலம்பூர், ஜூன் 18 – தாமான் டானாவ் கோத்தா (Taman Danau Kota) ஏரியில் பெரும் அளவிலான மீன்கள் உயிரிழந்தது குறித்த தகவல்களுக்கு கோலாலம்பூர் மாநகர் மன்றமான DBKL விளக்கம் அளித்துள்ளதோடு அன்றைய தினமே முழுமையான துப்ரவு பணிகள் நடைபெற்தையும் அது உறுதிப்படுத்தியது.
இடைவிடாத மழையின் காரணமாகவே இந்தச் சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என்றும் மழையானது நீரில் கரைந்துள்ள ஆக்சிஜன் அளவைக் குறைத்ததுடன், நீரின் தரத்தையும் மாற்றியமைத்ததாக DBKL வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
புயல் மற்றும் மழையின் காரணமாக ஏரிக்குள் வண்டல் மண் மற்றும் மாசுபாடு அதிகமாக கலந்ததால் அந்த ஏரியிலுள்ள நீர்வாழ் உயிரினங்களின் தாங்கும் திறனைப் பாதித்ததுடன், மீன்களின் உயிர்வாழ்வையும் கேள்விக்குறியாக்கின.
இச்சம்பவத்திற்கான துல்லியமான காரணங்களைக் கண்டறியும் நோக்கில், தரப் பரிசோதனைக்காக ஜூன் 16 ஆம் தேதியன்று கூட்டரசுப் பிரதேச சுற்றுச்சூழல் துறைடன் இணைந்து DBKL நீர் மாதிரிகளைச் சேகரித்தது.
காலை 10 மணியளவில் ஏரியில் அதிகமாக இறந்த மீன்கள் மிதந்துகொண்டிருந்த நிலையில், மாலை 4 மணிக்குள் அவை அனைத்தும் அகற்றப்பட்டுவிட்டன.
கூடுதலாக, மிதக்கும் குப்பைகள் மற்றும் மாசுபடுத்தும் அம்சங்கள் ஏரிக்குள் நுழைவதைக் கட்டுப்படுத்த, ஏரியின் நீர் உள்வரும் பகுதிகளில் குப்பைத் தடுப்பான்கள் அமைக்கப்பட்டுள்ளன.
Taman Danau Kota ஏரி பொழுதுபோக்கு பூங்காவாகவும், அதே வேளையில் வெள்ளத் தடுப்பு மற்றும் நீர் தேக்கக் குளமாகவும் செயல்படுகிறது.



