“மத்திய அரசுதான் ஜோகூர் வருவாயைக் கசியவிடுகிறது”: நிதிப் பகிர்வு விவகாரத்தில் TMJ கடும் சாடல்

ஜோகூர் பாரு, ஜூன்-21,
ஜோகூர் மாநிலத்தில் பொருளாதார மற்றும் வருவாய்க் கசிவுகள் ஏற்படுவதாகப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அண்மையில் பேசியப் பேச்சுக்கு, அம்மாநில இடைக்கால சுல்தான் துங்கு மக்கோத்தா இஸ்மாயில் திட்டவட்டமான மறுப்பைத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, நாடு தழுவிய அளவில், குறிப்பாக ஜோகூரின் சில துறைகளில் ஏற்படும் வருவாய்க் கசிவுகளைத் தடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அன்வார், மத்திய அரசு வழங்கும் நிதி ஒதுக்கீடு சில வரி வசூலை விட அதிகம் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதற்குப் பதிலடி கொடுத்த TMJ, ஜோகூர் ஆண்டுக்கு 40 பில்லியன் ரிங்கிட் வழங்கியும், வெறும் 2 பில்லியன் மட்டுமே திரும்பத் தரும் மத்திய அரசுதான் உண்மையான கசிவை ஏற்படுத்துகிறது என்றார்.
மூவாரில் நடைபெற்ற இளைஞர்களுடனான கலந்துரையாடலில் பேசிய அவர், அம்மாநிலத்திலுள்ள 5 மில்லியன் மக்களின் நலனுக்காக வெறும் 2 முதல் 3 பில்லியன் ரிங்கிட் எந்த மூலைக்கு என கேள்வி எழுப்பினார்.
இந்த முறையற்ற நிதிப் பகிர்வினால், பாசீர் கூடாங் மருத்துவமனை திட்டத் தாமதம், மோசமான சாலைகள் போன்ற உள்கட்டமைப்புப் பிரச்சனைகளால் ஜோகூர் மக்களே பாதிக்கப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், மாநிலத்திலிருந்து வசூலிக்கப்படும் வரியில் குறைந்தபட்சம் 25 முதல் 30 விழுக்காடு வரை மாநிலத்திற்கே திரும்ப வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
அதேசமயத்தில் ஜோகூரில் பல திட்டங்கள் தாமதமடைவதற்கு மத்திய அரசாங்கமே காரணம் எனவும் TMJ சாடினார்
மத்திய அரசுடன் பகைமையை ஏற்படுத்திக் கொள்ளத் தங்களுக்கு விருப்பமில்லை எனக் கூறிய TMJ, ஜோகூர் மக்களின் நலனை புத்ராஜெயா இனிமேலாவது தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
பிரதமருக்கு எதிராக பகிரங்கமாக TMJ கருத்து வெளியிட்டிருப்பது, அதுவும் ஜோகூர் சட்டமன்றத்திற்கு தேர்தல் வரவிருக்கும் நிலையில் கடும் தொனியில் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



