
கோலாலாம்பூர், ஜூன்-26 – மலேசியாவில் உள்ள வீட்டுப் பணிப்பெண்கள் மற்றும் அவர்களின் முதலாளிகளின் நலனைப் பாதுகாக்கும் வகையில், மருத்துவமனைச் செலவுகள் மற்றும் பணிப்பெண்கள் தப்பியோடுவதற்கான இழப்பீடுகளை உள்ளடக்கிய புதிய விரிவான காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மலேசிய வேலைவாய்ப்பு முகவர்களின் சங்கம் (PAPA), Gmat நிறுவனத்துடன் இணைந்து இந்தத் திட்டத்தை உருவாக்கியுள்ளது.
ஆண்டுக்கு சுமார் 200 ரிங்கிட் பிரீமியம் தொகையைக் கொண்ட இந்தத் திட்டத்தின் கீழ், ஒரு பணிப்பெண் வேலையை விட்டுத் தப்பியோடினால் முதலாளிக்கு 5,000 வெள்ளி இழப்பீடு வழங்கப்படும்.
இதுமட்டுமின்றி, மருத்துவமனை மற்றும் அறுவை சிகிச்சைக் கட்டணங்களுக்காக 10,000 வெள்ளி வரையிலும், பொது மருத்துவச் செலவுகளுக்காக 2,000 வெள்ளி வரையிலும் இந்த காப்பீடு பாதுகாப்பு வழங்குகிறது.
முதலாளிகளின் நிதி இழப்பைக் குறைக்கும் நோக்கில் Allianz பொதுக் காப்பீட்டு நிறுவனத்தால் டிஜிட்டல் முறையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
18 முதல் 65 வயதுக்குட்பட்ட தொழிலாளர்களுக்கு இந்த இணையக் காப்பீடு பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



