
கோலாலம்பூர், ஜூன் 30 – இந்த ஆண்டு மே மாதம் வரை mySalam சமூக சுகாதாரப் பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் 1,23,800 B40 பிரிவைச் சேர்ந்தவர்கள் பயனடைந்துள்ளனர். இதற்காக மொத்தம் 108 மில்லியன் ரிங்கிட் இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது.
இரண்டாவது நிதி அமைச்சர் டத்தோ ஸ்ரீ அமீர் ஹம்சா அசிசான் (Amir Hamzah Azizan) கூறுகையில், குறைந்த வருமானம் கொண்ட மக்களின் மருத்துவச் செலவுச் சுமையை குறைக்கும் நோக்கில் செயல்படும் இந்தத் திட்டம், புற்றுநோய், இருதய நோய், சிறுநீரக நோய் உள்ளிட்ட 50 வகையான தீவிர நோய்களுக்கு நிதி உதவி வழங்குகிறது என்றார்.
2019ஆம் ஆண்டு அறிமுகமான mySalam திட்டத்தின் மூலம், 2025 டிசம்பர் வரை 18.8 லட்சம் பேர், மொத்தம் 1.42 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான உதவியைப் பெற்றுள்ளனர். மேலும், இந்த ஆண்டு 91.5 லட்சம் STR உதவித் தொகை பெறுநர்கள் இத்திட்டத்தின் பாதுகாப்புக்கு தகுதி பெற்றுள்ளனர்.
அரசின் உறுதிப்பாட்டின் அடிப்படையில், முதலில் ஐந்து ஆண்டுகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட mySalam திட்டம், தற்போது 2026ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.



