
கோலாலம்பூர் ஜூலை 2 – ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ள ATM-இல் பணம் எடுப்பதற்கான 1 ரிங்கிட் சேவைக் கட்டண விலக்கு, வங்கிகளுக்குச் சொந்தமான மற்றும் அவற்றால் இயக்கப்படும் ATM-களுக்கு மட்டுமே பொருந்தும் என தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபாஹ்மி ஃபட்சில் ( Datuk Fahmi Fadzil) விளக்கமளித்துள்ளார்.
நாட்டிலுள்ள சுமார் 16,000 ATM-களில் 84 விழுக்காடு வங்கி ATM-களாக இருப்பதால் அவற்றுக்கு மட்டுமே இந்த விலக்கு வழங்கப்படுகிறது.
மீதமுள்ள 16 விழுக்காடு ATM-கள், வங்கி அல்லாத சுயாதீன நிறுவனங்களால் இயக்கப்படுவதால், அவற்றுக்கு இந்தச் சலுகை பொருந்தாது.
அதே வேளை, வங்கிக்குச் சொந்தமான ATM-இல் பணம் எடுக்கும்போதும் 1 ரிங்கிட் கட்டணம் வசூலிக்கப்பட்டால், பொதுமக்கள் ‘பேங்க் நெகாராவில்’ (Bank Negara ) புகார் அளிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.



