
பேங்கோக், ஜூலை-7-தாய்லாந்தின் மேற்குப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தொல்பொருள் அகழ்வாராய்ச்சியில், பண்டைய இந்திய ‘பிராமி’ எழுத்துகள் பொறிக்கப்பட்ட, சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான இரண்டு தங்க மோதிரங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
Phetchaburi மாநிலத்தில் உள்ள Don Yai Thong தொல்பொருள் தளத்தில், மனித எலும்புக்கூடுகளுடன் இந்த மோதிரங்கள் கண்டெடுக்கப்பட்டதாக அந்நாட்டின் நுண்கலைத் துறை தெரிவித்துள்ளது.
கண்டெடுக்கப்பட்ட மோதிரங்களில் ஒன்றில், பண்டைய இந்திய எழுத்து முறையான ‘பிராமி’ (Brahmi script) எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன.
அதில் pusarakhitasa என்று எழுதப்பட்டுள்ளது.
இதற்கு ‘புஷ்ய நட்சத்திரத்தால் பாதுகாக்கப்பட்டவர்’ என்று பொருள் என நிபுணர்கள் விளக்குகின்றனர்.
மற்றொரு மோதிரம் எவ்வித வேலைப்பாடுகளும் இல்லாத எளிய தங்க மோதிரமாகும்.
இவை ஒரு பண்டைய இந்திய வர்த்தகருக்குச் சொந்தமானதாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
இவ்வாண்டு தொடக்கத்தில், நெல் வயல் ஒன்றில் பண்டைய வெண்கல முரசுகளின் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்தே இந்த அகழ்வாராய்ச்சி தளம் கண்டறியப்பட்டது.
இரும்புக்காலத்தைச் சேர்ந்த இந்த இடத்தில் இதுவரை 8 மனித எலும்புக்கூடுகளும், பல பழங்கால ஆபரணங்களும் மீட்கப்பட்டுள்ளன.
அடுத்த ஒரு மாதத்திற்குள் இந்த அகழ்வாராய்ச்சி பணிகள் நிறைவடையும் என்றும், கண்டெடுக்கப்பட்ட அரிய பொருட்கள் விரைவில் பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



