Latestஉலகம்விளையாட்டு

வண்ணமயமாகத் தொடங்கிய கிளாஸ்கோ 2026 காமான்வெல்த் போட்டி

கிளாஸ்கோ, ஜூலை-24-2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் உள்ள OVO Hydro அரங்கில் இன்று அதிகாலை கோலாகலமாகத் தொடங்கின.

4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் காமன்வெல்த் போட்டி வரலாற்றில் முதன்முறையாக இந்தத் தொடக்க விழா முழுவதுமாக ஒரு மூடரங்கில் (Indoor Arena) நடத்தி முடிக்கப்பட்டது சிறப்பம்சமாகும்.

தொடக்க விழாவில், பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்ல்ஸ் மற்றும் ராணியார் கமிலா ஆகியோர் பிரிட்டிஷ் தொலைக்காட்சி நிகழ்ச்சியான Doctor Who-வின் புகழ்பெற்ற ‘TARDIS’ நேரப் பயண இயந்திரத்திலிருந்து அரங்குக்குள் தோன்றி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினர்.

பின்னர் சார்ல்ஸ் போட்டிகளை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.

​செலவினங்களைக் குறைக்கும் வகையில், இந்த முறை 10 விளையாட்டுப் பிரிவுகள் மற்றும் 74 நாடுகளைச் சேர்ந்த சுமார் 3,000 விளையாட்டு வீரர்கள் மட்டுமே இதில் பங்கேற்கின்றனர்.

மலேசியா உள்ளிட்ட 74 நாடுகளின் அணிவகுப்பு மிகவும் உற்சாகமாக நடைபெற்றது.

மலேசியா சார்பில் சுமார் 40 விளையாட்டாளர்கள் பாத்திக் வடிவிலான சட்டையை அணிந்து அணிவகுப்பில் பங்கேற்றனர்.

தேசிய அணிக்குத் தலைமையேற்று, மாற்றுத் திறனாளிகளுக்கான நீளம் தாண்டும் வீரரும் இருமுறை பாராலிம்பிக் வெற்றியாளருமான டத்தோ Abdul Latif Romly மலேசியக் கொடியை ஏந்திச் சென்றார்.

மலேசியா இம்முறை 22 பாரா விளையாட்டாளர்கள் உட்பட 59 போட்டியாளர்களையும், 45 அதிகாரிகளையும் கிளாஸ்கோ அனுப்பி வைத்துள்ளது.

5 தங்கப் பதக்களை வெல்லவும் இலக்கு வைக்கப்பட்டுள்ளது.

இவ்வேளையில் போட்டியை நடத்தும் ஸ்காட்லாந்து அணி அரங்கிற்குள் நுழைந்தபோது பார்வையாளர்களின் ஆரவாரம் விண்ணைப் பிளந்தது.

​ஸ்காட்லாந்தின் பாரம்பரியத்தைக் பறைசாற்றும் வகையில் ‘நெஸ்ஸி’ (Loch Ness Monster) எனப்படும் புராணக் கதைக் கதாபாத்திரம் மற்றும் பிரபல இசைக் கலைஞர்களின் கண்கவர் இசை நிகழ்ச்சிகள் விழாவுக்கு மேலும் மெருகூட்டின.

​குறைந்த செலவில், மிகவும் கச்சிதமான மற்றும் புதுமையான முறையில் தொடங்கப்பட்டுள்ள இந்த விளையாட்டுப் போட்டிகள் அடுத்த 11 நாட்களுக்கு இரசிகர்களுக்கு விருந்தாக அமையும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!