
கூலிம், ஆகஸ்ட்.12-கெடா, கூலிம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட இருவர் இன்று காலை சுமார் 10 மணியளவில் தப்பிச் சென்றனர். எனினும் அவர்கள் மீண்டும் பிடிபட்டனர்.
Serdangங்கில் நிகழ்ந்த சம்பவம் ஒன்று தொடர்பில், குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளவே அவர்கள் முதலில் கூலிம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டது விசாரணையில் தெரிய வந்ததாக கூலிம் மாவட்டக் காவல் துறைத் தலைவர் சூப்பிரண்டண்ட் Syamsul Sinring தெரிவித்தார்.
31 மற்றும் 27 வயதுடைய அந்த இருவர் மீதும் ஏப்ரல் 30 ஆம் தேதி கூலிம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு, வழக்கு விசாரணை நிலுவையில் உள்ள நிலையில் அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டிருந்தது.
ஒருவர் 4,000 ரிங்கிட் ஜாமீனிலும், மற்றொருவர் 3,000 ரிங்கிட் ஜாமீனிலும் விடுவிக்கப்பட்டனர். ஆவணங்களைச் சமர்ப்பித்தல் மற்றும் வழக்கு நிர்வாகம் தொடர்பான நடவடிக்கைகளுக்காக அவ்வழக்கு ஜூன் 8, ஜூலை 12 மற்றும் ஆகஸ்ட் 12 ஆகிய தேதிகளில் விசாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன் பின்னர், அவர்களில் ஒருவர் கூலிம் நீதிமன்றக் கட்டிடத்தின் முதல் தளத்திலிருந்து தூண் வழியாகக் கீழே சறுக்கி இறங்கி நீதிமன்ற வளாகத்திற்குள்ளேயே தப்பியோடினார். மற்றொருவர் மீண்டும் கட்டிடத்திற்குள் நுழைந்து பின்பக்க வெளியேறும் வழியாகத் தப்பினார்.
கூலிம் நீதிமன்றத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்ட நிலையில் அவ்விருவரும் மீண்டும் கைதாகினர். அச்சம்பவத்தின் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் முன்னதாக வைரலானது.



