
ஜோகூர் பாரு, ஆகஸ்ட்-24 -ஜோகூர், Linkeduaவில் சட்டவிரோதப் பந்தயத்திற்காக அந்நெடுஞ்சாலையை மூடியது தொடர்பில் எண்மர் இன்று முதல் நான்கு நாட்களுக்குத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் மோட்டார் பந்தயத் துறையைச் சேர்ந்த சமூக ஊடகப் பிரபலமும் ஒருவராவார்.
குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 117-இன் கீழ் காவல்துறை அளித்த விண்ணப்பத்தைத் தொடர்ந்து, கூலாய் மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி ஆர். ஷாலினி 26 முதல் 45 வயதுடைய அந்த எட்டு பேரையும் தடுத்து வைக்க அனுமதி வழங்கினார். அவர்கள் அனைவரும் 1987 ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 42(1)-இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
அவர்களை நேற்று காலை 11.54 மணிக்கு கூலாய் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கப் பிரிவின் குழுவினர் கைது செய்ததாக ஜோகூர் காவல் துறைத் தலைவர் Ab Rahaman Arsad தெரிவித்தார்.
கடந்த சனிக்கிழமை Linkedua நெடுஞ்சாலையில் காலை 7 மணிக்கு இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் சட்டவிரோதப் பந்தயத்தில் ஈடுபடும் 33 வினாடிகள் கொண்ட காணொளியொன்று முன்னதாக வெளியாகியிருந்தது. அச்சட்டவிரோதப் பந்தயம் நடைபெறுவதற்கு ஏதுவாக சிலர் நெடுஞ்சாலையிக் போக்குவரத்தை நிறுத்திய காட்சிகளும் அதில் இருந்தன.
அதோடு பந்தயம் முடிந்ததைக் கொண்டாடுவதற்காக அக்குழுவினர் பட்டாசுகளை வெடிப்பதையும், சம்பந்தப்பட்ட சமூக ஊடகப் பிரபலம் உட்பட சிலர் சாலையோரத்தில் நிற்பதையும் அக்காணொளியில் காண முடிந்தது.



