Latestமலேசியா

சிம்பொனி ஆஃப் ஹோப் 2026: ஷமேதா கிருஷ்ணாவுக்கு ஆதரவாக நிதி திரட்டும் விருந்து நிகழ்ச்சி

ஜோகூர் பாரு, ஆகஸ்ட்.27- கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நிகழ்ந்த ஒரு சாலை விபத்து, ஷமேதா கிருஷ்ணாவின் வாழ்க்கையை ஒரே நொடியில் மாற்றியது. அதுவரை இயல்பாக நகர்ந்த அவரது வாழ்க்கைப் பயணம், அதன் பின்னர் மீண்டு எழுவதற்கான போராட்டமாக மாறியது. ஆனால், “ஒருநாள் ஷமேதா மீண்டும் எழுந்து நடப்பார்” என்ற நம்பிக்கையை அவரது குடும்பம் மட்டும் சுமந்து செல்லவில்லை. இன்று அந்த நம்பிக்கை, பலரையும் ஒன்றிணைக்கும் ஒரு மனிதநேயப் பயணமாக உருவெடுத்துள்ளது.

அந்தப் பயணத்தின் அடுத்த அத்தியாயமாகவே “Symphony of Hope 2026” அறப்பணி இசை விழா நடைபெறவிருக்கிறது.

“அறம் செய விரும்பு” என்ற மனிதநேயச் சிந்தனையை அடித்தளமாகக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சி, ஷமேதாவின் மறுவாழ்வுக்குத் தேவையான ஆதரவைத் திரட்டுவதோடு, அவரது குடும்பத்திற்கு “இந்தப் போராட்டத்தில் நீங்கள் தனியாக இல்லை” என்ற நம்பிக்கையையும் வழங்குகிறது.

வரும் செப்டம்பர் 12ஆம் தேதி, சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு, ஜோகூர் பாருவிலுள்ள Nova Grand Hall-ன் Moksha அரங்கில், இசையும் மனிதநேயமும் ஒன்றிணையும் அந்த மாலை அரங்கேறவுள்ளது.

                                                                                       

இது வெறும் நிதி திரட்டும் நிகழ்ச்சியாக மட்டும் இருக்காது. “விருந்து, விருது, விடியல்” என மூன்று அங்கங்களை இணைத்து வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மாலை, ஒரு குடும்பத்தின் நம்பிக்கையை ஒரு சமூகத்தின் நம்பிக்கையாக மாற்றும் முயற்சியாக அமைகிறது.

ஷமேதாவுக்காக தொடங்கிய இந்தப் பயணத்தில் பலரும் தங்கள் கரங்களை இணைத்துள்ளனர். ஸ்கூடாய் லயன்ஸ் குழு சமூகப் பங்காளியாக முன்வந்துள்ள நிலையில், வணக்கம் மலேசியா வியூகப் பங்காளியாக இணைந்துள்ளது.

மக்கள் ஓசை, House of Neelavaanam மற்றும் Rajeev Kumar Productions ஆகியவையும் ஆதரவுப் பங்காளிகளாக கைகோர்த்து, இந்த மனிதநேய முயற்சிக்குத் தங்கள் பங்களிப்பை வழங்குகின்றன.

இந்த முயற்சி பெரிய அமைப்புகளுக்கோ நன்கொடையாளர்களுக்கோ மட்டும் உரியதல்ல என்பதே ஏற்பாட்டாளர்களின் எண்ணம். சமூகத் தலைவர்கள் முதல் கலைஞர்கள் வரை, ஊடகத்துறையினர் முதல் பொதுமக்கள் வரை — ஷமேதாவின் மீட்புப் பயணத்தில் தங்களால் இயன்ற வகையில் அனைவரும் பங்கெடுக்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதே சமயத்தில்,
“குழந்தைகளிடம் மனிதநேயத்தைப் பற்றி பேசுவதைக் காட்டிலும், அதைச் செயலால் உணரச் செய்வது முக்கியம்” என்ற எண்ணத்தில், பள்ளிகளும் இந்த முயற்சியில் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. பள்ளிகளிடமிருந்து எந்தப் பங்கேற்புக் கட்டணமும் பெறப்படாது. மனமுவந்து வழங்கப்படும் நன்கொடைகள் மட்டுமே வரவேற்கப்படுகின்றன.

பள்ளிகள் சார்பில் நன்கொடைகள் மொத்தமாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் போது, சம்பந்தப்பட்ட பள்ளியின் பெயரைக் குறிப்பிடுமாறும், நிகழ்வில் பங்கேற்கும் பள்ளிகளுக்கு சிறப்பு மரியாதை வழங்கப்படும் என்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரும் ஷமேதாவின் தந்தையுமான சரவணதீர்த்தா தெரிவித்துள்ளார். நிகழ்வின் கலாச்சாரத் தன்மையை மேலும் அழகுபடுத்தும் வகையில், பங்கேற்பாளர்கள் கலாச்சார உடையில் வரவும் ஊக்குவிக்கப்படுகின்றனர்.

ஷமேதாவுக்காக ஒன்றிணையும் இந்த மாலையில் டத்தோ மற்றும் டத்தின் சுகுமாரன் – அனிதா ஆகியோர் முதன்மை வருகையாளர்களாகக் கலந்து கொள்ளவுள்ளனர். FWD Global தலைமைச் செயல் அதிகாரி டத்தோ ஸ்ரீ காந்தி முத்துசாமி சிறப்பு விருந்தினராக நிகழ்வில் பங்கேற்கவுள்ளார்.

நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்புவோர், தங்களின் வருகையை முன்கூட்டியே உறுதி செய்து கொள்ள நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சரவணதீர்த்தாவை திரையில் காணும் தொடர்பு எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

ஒரு விபத்து ஷமேதாவின் காலடிகளை நிறுத்தியிருக்கலாம். ஆனால் அவரது வாழ்க்கைப் பயணத்தை அது நிறுத்திவிடவில்லை.

இன்று அவரது குடும்பத்துடன் சேர்ந்து ஒரு சமூகமே, அவர் மீண்டும் தனது கால்களில் எழுந்து நிற்க வேண்டும் என்ற நம்பிக்கையைத் தாங்கி நிற்கிறது.

“ஒருவரின் துயரத்தை இன்னொருவர் தனது துயரமாக உணரும் தருணமே மனிதநேயம்.”

அந்த மனிதநேயத்தின் இன்னொரு வெளிப்பாடாக உருவாகும் “Symphony of Hope 2026”, ஒரு இரவுக்கான இசை விழாவாக முடிந்துவிடாமல், ஷமேதாவின் நாளைய விடியலுக்கான நம்பிக்கையாக மாறட்டும்.

நாம் வழங்கும் ஒவ்வொரு கரமும் அவருக்கு ஆதரவாகட்டும்; ஒவ்வொரு பங்களிப்பும் அவருக்கு வலிமையாகட்டும்; ஒருநாள், நாம் அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஷமேதாவின் காலடிச் சத்தம் மீண்டும் கேட்கட்டும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!