
கோலாலம்பூர், செப்டம்பர் 6 – நாட்டின் கல்வி முறையில், குறிப்பாக உயர்கல்விக்கான வாய்ப்புகளில், இளைஞர்களுக்கு நேரடியாகப் பாதிப்பை ஏற்படுத்தும் மூன்று முக்கிய சீர்திருத்தங்களை அரசு மேற்கொள்ள வேண்டுமென ம.இ.கா புத்ரா பிரிவு தேசியத் தலைவர் டாக்டர் சதீஷ் குமார் சங்கர் (DR SHATESH KUMAR SANGAR) வலியுறுத்தியுள்ளார்.
முதலாவதாக, மெட்ரிகுலேஷன் சேர்க்கைக்கான 10A விதியை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென அவர் கேட்டுக்கொண்டார். 2026 மற்றும் 2027 கல்வியாண்டில், 2025ஆம் ஆண்டு SPM தேர்வில் 10A மற்றும் அதற்கு மேல் பெற்ற, மெட்ரிகுலேஷனுக்கு விண்ணப்பித்த 6,717 மாணவர்களுக்கும் இனம் மற்றும் பின்னணியைப் பொருட்படுத்தாமல் இடம் தானாக வழங்கப்படுகிறது.
ஆனால், சில பள்ளிகளில் 8 அல்லது 9 பாடங்கள் மட்டுமே வழங்கப்படுவதால், அனைத்து பாடங்களிலும் A பெற்ற மாணவர்களும் பாதிக்கப்படலாம். எனவே, பள்ளியில் வழங்கப்படும் அதிகபட்ச பாடங்களின் அடிப்படையில் 8A அல்லது 9A பெற்ற மாணவர்களுக்கும் சம வாய்ப்பு வழங்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மெட்ரிகுலேஷன், ஆறாம் படிவம், STPM மற்றும் பல்கலைக்கழகங்களின் அடிப்படைப் படிப்புகள் உள்ளிட்ட முன்பல்கலைக்கழகக் கல்விப் பாதைகளை உயர்கல்வி அமைச்சின் கீழ் ஒருங்கிணைப்பது குறித்து அரசு ஆய்வு செய்ய வேண்டுமென அவர் தெரிவித்தார். 1998ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மெட்ரிகுலேஷன் திட்டத்தை கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களுக்குப் பிறகு மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவும் அவர் கூறினார்.
அதே நேரத்தில் நன்னெறி கல்வி பாடத்தில் மேற்கொள்ளப்படும் சீர்திருத்தத்தின் தற்போதைய நிலையை அரசு அறிவிக்க வேண்டுமென அவர் கோரினார். கடந்த மே 3ஆம் தேதி, தேர்வு முறை மற்றும் மதிப்பெண் வழங்கும் நடைமுறை தொடர்பான கவலைகளைத் தொடர்ந்து, கல்வி அமைச்சர் ஆய்வு செய்ய உத்தரவிட்டிருந்தார். 2027ஆம் ஆண்டில் புதிய தேர்வு முறை அல்லது மதிப்பெண் வழங்கும் நடைமுறை அறிமுகப்படுத்தப்படுமா என்பதையும் அரசு தெளிவுபடுத்த வேண்டும்.
கல்வியில் குறைபாடுகள் இருந்தால் அவற்றைச் சரிசெய்து, இளைஞர்களின் எதிர்காலத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டுமென டாக்டர் சதீஷ் குமார் வலியுறுத்தினார்.



