Latestமலேசியா

மாரடைப்பு ஏற்பட்டதாக சந்தேகம்: 2 மீட்டர் ஆழமான பள்ளத்தில் விழுந்து ஆடவர் பலி

கோத்தா பாரு, செப்-10-கிளந்தான், Kubang Kerianனில் கழிவுநீர் தொட்டி அமைக்கும் பணியின் போது, மாரடைப்புக்கு ஆளானதாக நம்பப்படும் 48 வயதான ஆடவர் சுமார் இரண்டு மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தில் விழுந்து உயிரிழந்தார். அந்நபர் Zakari Mat Jusoh என அடையாளம் காணப்பட்டுள்ளது.

நேற்று மாலை 5.28 மணியளவில் அச்சம்பவம் குறித்து அவசர அழைப்பு கிடைத்ததைத் தொடர்ந்து மீட்புக் குழுவினர் அங்கு விரைந்ததாக கோத்தா பாரு தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் செயல்பாட்டுப் பிரிவு ஆணையர் Mohd Ridzuan Baharuddin தெரிவித்தார். மீட்புக் குழுவினர் அங்கு சென்றடைந்த போது, அந்நபர் பள்ளத்திற்குள் மல்லாக்கப் படுத்த நிலையில் சுயநினைவின்றி இருப்பதைக் கண்டதாக அவர் கூறினார்.

தாமும் அவரும் சில மீட்டர் இடைவெளியில்தான் வேலை செய்து கொண்டிருந்ததாகவும், திடீரென ஏதோ கீழே விழும் சத்தம் கேட்டதாகவும் சக ஊழியர் ஒருவர் தெரிவித்தார். திரும்பிப் பார்த்த போது Zakariaவைக் காணவில்லை என்றும், பின்னர் அவர் பள்ளத்திற்குள் மயங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அவர் விளக்கினார். Zakariaவை மேலே கொண்டு வந்த நிலையில், சம்பவ இடத்துக்கு வந்த மருத்துவ அதிகாரி அவர் உயிரிழந்ததை உறுதிப்படுத்தியதாக அந்நண்பர் மேலும் தெரிவித்தார்.

இதனிடையே Zakaria ஏற்கனவே மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றிருந்ததாகவும் அண்மையில்தான் அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியிருந்ததாகவும் அவரது குடும்பத்தினர் தகவல் அளித்தனர். அவரது சடலம் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு, மேல் நடவடிக்கைகளுக்காக Raja Perempuan Zainab II மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!