Latestமலேசியா

தேசிய மலாய் மொழிப் போட்டிகளில் முத்திரை பதித்த கெடா தமிழ்ப்பள்ளி மாணவிகள் அக்ஷயா, பிரித்திஷா

கெடா, செப்- 13 – மாவட்ட அளவில் தொடங்கிய வெற்றிப் பயணம், மாநிலத்தைக் கடந்து தேசிய அரங்கிலும் முதலிடம்! தமிழ்ப்பள்ளி மாணவிகளான அக்ஷயா மகாதேவன் மற்றும் பிரித்திஷா குணசீலன், தங்களது திறமையால் தேசிய அளவில் சாதனை படைத்து தமிழ்ப்பள்ளிகளுக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.

கெடா ஆறுமுகம் பிள்ளை தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த அக்ஷயா மகாதேவன், Karnival Semarak Perpaduan Bahasa 2026-இன் ‘Dare To Spell’ போட்டியில் கோலா மூடா மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து தனது வெற்றிப் பயணத்தைத் தொடங்கினார். தொடர்ந்து மாநில அளவிலும் முதலிடத்தைத் தக்கவைத்த அவர், தேசியப் போட்டியிலும் வாகையாளர் பட்டத்தை வென்று முத்திரை பதித்துள்ளார்.

அதே வெற்றிப் பாதையில் தாமான் கெளாடி தமிழ்ப்பள்ளியின் நான்காம் ஆண்டு மாணவியான பிரித்திஷா குணசீலனும் தேசிய அரங்கில் சாதனை படைத்துள்ளார். மாவட்ட மற்றும் மாநில அளவிலான மலாய் மொழி கதை சொல்லும் போட்டிகளில் முதலிடம் பெற்ற அவர், செப்டம்பர் 10ஆம் தேதி மலாக்காவில் நடைபெற்ற தேசியப் போட்டியில் கெடாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.

16 மாநிலங்களைச் சேர்ந்த சிறந்த மாணவர்களுடன் போட்டியிட்ட பிரித்திஷா, தேசிய அளவிலும் முதலிடத்தைத் தட்டிச் சென்றார்.

குறிப்பாக, போட்டியாளர்களில் பலர் ஆறாம் ஆண்டு மாணவர்களாக இருந்த நிலையில், நான்காம் ஆண்டு மாணவியாக அவர்களை எதிர்கொண்டு முதலிடம் வென்றது அவரது சாதனைக்கு மேலும் சிறப்பு சேர்த்துள்ளது. அவருக்கு வெற்றிக் கிண்ணத்துடன் RM400 பரிசும் வழங்கப்பட்டது.

அக்ஷயாவின் வெற்றிக்குப் பின்னால் ஆசிரியர் உத்ராவதி, பள்ளி ஆசிரியர்கள், கெடா குழுவினர் மற்றும் பெற்றோரின் தொடர் வழிகாட்டுதலும் ஆதரவும் முக்கிய பங்காற்றியுள்ளது.

வெவ்வேறு போட்டிகள்… ஒரே இலக்கு… தேசிய அளவில் முதலிடம்! தங்களது திறமை, கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியால் தமிழ்ப்பள்ளிகளின் திறனை தேசிய அரங்கில் பறைசாற்றிய அக்ஷயா மற்றும் பிரித்திஷாவுக்கு வணக்கம் மலேசியாவின் மனமார்ந்த வாழ்த்துகள்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!