
கன்னியாகுமரி, செப்-5 – ஆறு மாத கடுமையான பயிற்சி… அதற்குப் பலனாக 27 தங்கம், 17 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 47 பதக்கங்கள்! இந்தியாவின் கன்னியாகுமரியில் நடைபெற்ற முதலாவது உலக அடிமுறை சிலம்பம் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில், மலேசியாவின் 10 வீரர்கள் சிறப்பான சாதனையைப் பதிவு செய்துள்ளனர்.
ஐந்து நாடுகளைச் சேர்ந்த சுமார் 300 வீரர்கள் பங்கேற்ற இப்போட்டி, செப்டம்பர் 3 முதல் 5ஆம் தேதி வரை CSI Auditorium-இல் நடைபெற்றது.9 முதல் 26 வயதுடைய 6 ஆண்கள் மற்றும் 4 பெண்கள் மலேசியாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய நிலையில், Senior மற்றும் Super Senior என இரு பிரிவுகளிலும் மலேசியா ஒட்டுமொத்த வாகையாளர் பட்டத்தைத் தட்டிச் சென்றது.
இதில் உமாதேவி மோகன் காந்தி மற்றும் காமேஸ்வரன் சரவணன் தலா நான்கு தங்கப் பதக்கங்களை வென்று மலேசிய அணியின் சிறந்த வீரர்களாக முத்திரை பதித்தனர். இந்த 47 பதக்கங்களுக்குப் பின்னால் ஆறு மாத உழைப்பும் தியாகமும் இருந்துள்ளது.
வீரர்கள் வாரம் முழுவதும் பயிற்சி மையத்திலேயே தங்கி, உடல் சோர்வு, தசை வலி, படிப்பு மற்றும் வேலை என பல சவால்களுக்கு மத்தியிலும் தீவிர பயிற்சியைத் தொடர்ந்துள்ளனர். அணியின் தலைமைப் பயிற்சியாளராக யகுலேசன் ஆறுமுகம், மகாகுருவாக தியாகராஜன் முனுசாமி, அணி நிர்வாகியாக சாந்தி ராமசாமி ஆகியோர் செயல்பட்டனர்.
குறிப்பாக ஆறு மாத பயிற்சிக்கான செலவுகளை யாகுலேசன் ஆறுமுகம் மற்றும் தியாகராஜன் முனுசாமி ஏற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக அளவிலான அடிமுறை போட்டியில் மலேசியா களமிறங்கியது இதுவே முதல்முறை.
முதல் உலகப் போட்டியிலேயே 47 பதக்கங்களுடன் இரு பிரிவுகளில் வாகையாளர் பட்டம்! மலேசிய அணிக்கு மறக்க முடியாத தொடக்கமாக இது அமைந்துள்ளது.



